சிசிடிவி-யில் சிக்கிய சென்னைப் பெண் போலீஸ்! - கடை உரிமையாளருக்கு அடி, உதை #Shame

சிசிடிவி-யால் திருடர்கள் பிடிபடுவது வழக்கம். ஆனால், சென்னையிலோ பெண் போலீஸ் சிக்கியிருக்கிறார். 

சென்னையில் சூப்பர் மார்க்கெட்டில் சாக்லெட் திருடிய பெண் காவலரை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

பெண் போலீஸ்
 

சென்னை எழும்பூரில் உள்ள நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்டுக்கு நேற்று போலீஸ் சீருடையில் வந்திருக்கிறார் பெண் காவலர் ஒருவர். நீண்ட நேரமாகப் பொருள்களை வாங்காமல் சூப்பர் மார்க்கட்டுக்குள் அங்கும் இங்குமாக நடந்து போன் பேசினார். இதைப் பார்த்த பெண் ஊழியருக்குச் சந்தேகம் வந்து, பெண் காவலரைத் தொடர்ந்து நோட்டமிட்டுள்ளார். பெண் காவலர் போன் பேசுவது போன்று பாவனை செய்துகொண்டே சாக்லெட்டுகளை எடுத்து சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டார். இதைக் கவனித்த பெண் ஊழியர், கடை உரிமையாளர் பிரணவிடம் கூறினார். பிரனவ் கடையின் சிசிடிவி பதிவுகளைப் பார்த்தபோது மேலும் சில பொருள்களை அந்தப் பெண் காவலர் சட்டைப் பைக்குள் வைப்பது தெரியவந்தது. சிறிது நேரம் கழித்து ஒன்றுமே தெரியாததுபோல் இரண்டு பொருள்களுடன் பில் போடும் இடத்துக்கு வந்திருக்கிறார்.

`பாக்கெட்டில் உள்ள பொருள்களை எடுத்து வெளியே வையுங்கள்’ என்று பிரணவ் கூற, அப்படி எதுவுமில்லை என்று பெண் காவலர் சமாளித்திருக்கிறார். பெண் ஊழியர்களை வைத்து சோதனை செய்தபோது பெண் காவலரின் பாக்கெட்டில் சாக்லெட்டுகள், ஓடோமாஸ் போன்ற சின்னச் சின்ன பொருள்கள் இருந்தன. மாட்டிக் கொண்டதை அறிந்த பெண் காவலர், ஒரு கட்டத்தில் தவற்றை ஒப்புக்கொண்டார்.   `இனிமேல் திருட மாட்டேன்’  என்று பெண் காவலரிடம் எழுதி வாங்கிக்கொண்ட பிரணவ், அவரை எச்சரித்து அனுப்பி வைத்தார். அந்தப் பெண் காவலர் அதோடுவிடவில்லை. தன் கணவரிடம் நடந்ததைச் சொல்ல, அவர் இரண்டு நண்பர்களுடன் வந்து கடை உரிமையாளர் பிரனவையும், ஊழியர் ஒருவரையும் கடுமையாகத் தாக்கிவிட்டுச் சென்றனர். 

பெண் காவலர் திருடி மாட்டிக்கொண்டதும், அவரின் கணவர் கடை ஊழியர்களைத் தாக்கியதும் சிசிடிவி-யில் பதிவாகியிருந்ததால், பிரணவ் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிசிடிவி பதிவுகளையும் சமர்ப்பித்தார். 

அந்தப் பெண் காவலர் கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் நந்தினி என்று தெரியவந்துள்ளது. எழும்பூர் போலீஸார், நந்தினியின் கணவர் கணேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர். நந்தினியைப் பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகரக் காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!