தொழிலதிபரை கடத்த பிளான்போட்ட பெண்கள்... கும்பலை குறிவைத்து பிடித்தது போலீஸ்

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தொழிலதிபரை  கடத்தி பணம் பறித்த  கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சொகுசு வாழ்க்கை

 

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த பாக்கம் பகுதியில் டைல்ஸ் கடை வைத்திருப்பவர் பாலச்சந்தர். இவரது சம்மந்தி முத்துக்குமார் இந்த கடையை கவனித்து வருகிறார். கடந்த ஜூன் 30-ம் தேதி மர்ம கும்பல் ஒன்று முத்துக்குமாரை  காருடன் கடத்தியது. ‘பத்து லட்சம் கொடுத்தால் உயிருடன் விடுவோம். இல்லையென்றால் கொலை செய்துவிடுவோம்’ என முத்துக்குமாரின் உறவினருக்குக் கடத்தல்காரர்கள் போன் செய்துள்ளனர். வேறு வழியின்றி ரூ.10 லட்சம் கொடுத்து முத்துக்குமார் மீட்கப்பட்டார். இதனையடுத்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையின் தீவிர விசாரணையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்களுக்கு இந்த கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக பெண்கள் உட்பட 4 பேரை சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் ஞானசேகர் என்பவரின் தாய் கங்காதேவி, ஞானசேகரின் மனைவிகள் சரண்யா, விக்டோரியா, நண்பர் சதீஷ் என்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்கள் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுக் கடத்தல் தொழிலில் ஈடுபட்டதாக காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்தனர். இக்கடத்தல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ஞானசேகர் மற்றும் அவனது 5 கூட்டாளிகள் தலைமறைவாகவே இருந்து வந்தனர். தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு ஞானசேகர் மற்றும் அவரது கூட்டாளிகள் சுரேஷ், முரளி ஆகியோரை மதுராந்தகம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, கத்திகள், மற்றும் 1.5 லட்சம் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!