வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (26/07/2018)

கடைசி தொடர்பு:15:15 (26/07/2018)

`புதுச்சேரிக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும்' - கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த திருச்சி சிவா!

``புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்” என்று திருச்சி சிவா எம்.பி ராஜ்யசபாவில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

திருச்சி சிவா

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி திருச்சி சிவா எம்.பி ராஜ்யசபாவில் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். ராஜ்யசபா செயலரிடம் அவர் அளித்துள்ள கவன ஈர்ப்புத் தீர்மானத்தில், ``புதுச்சேரியைப் பொறுத்தவரை மத்திய அரசு 70% மானியத்தை கடந்த காலங்களில் அளித்து வந்தது. அதைப் படிப்படியாகக் குறைத்து தற்போது வெறும் 25% மட்டுமே மானியமாக அளித்து வருகிறது. 14-வது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி அனைத்து மாநிலங்களுக்கும் 42% மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால், யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மத்திய நிதிக்குழுவின் பரிந்துரையின்படி மானியம் அளிக்கப்படவில்லை. எனவே, அவசரம் கருதி மற்ற மாநிலங்களைப் போலவே புதுச்சேரிக்கும் மானியத் தொகையை வழங்க வேண்டும்.
 

புதுச்சேரி சட்டப்பேரவை

மேலும், புதுச்சேரி மாநிலத்தை 15-வது நிதிக்குழு பரிந்துரையில் சேர்க்க வேண்டும். ஜி.எஸ்.டி வரி விதிப்பில் மற்ற மாநிலங்களைப் போலவே புதுச்சேரிக்கும் சம உரிமை வழங்குவதுபோல, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ஏற்கெனவே அம்மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை அளித்தால் துறைமுகம், தொழிற்சாலைகள், மீன்வளம், வேளாண்மை, கல்வி போன்றவற்றில் அம்மாநிலம் வளர்ச்சியடையும். அதன்மூலம் இளைய சமுதாயத்தினருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மாநிலத்தின் வருவாயும் பெருகும். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். எனவே, அவரசம் கருதி புதுச்சேரிக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க