வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (26/07/2018)

கடைசி தொடர்பு:15:55 (26/07/2018)

பள்ளிச் சிறுமிகளுக்கு வன்கொடுமை - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்!

பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவுகொடுத்த வேன் அட்டெண்டரை கைதுசெய்யக் கோரி, பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிச்சிறுமிகளுக்கு

சென்னை மாங்காட்டை அடுத்துள்ள கொளப்பாக்கத்தில், தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இதில் படித்துவரும் பள்ளிச் சிறுமிகளை வேனில் அழைத்துச்சென்று வரும் வேன் அட்டெண்டராக இருப்பவர் பாஸ்கர். சிறுமிகளைப் பள்ளிக்கு அழைத்துச்சென்று வரும்போது, பாஸ்கர் பாலியல் தொல்லைகொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், குழந்தைகளிடம் தகாத முறையில் நடந்துகொள்வதாகவும், பெற்றோர்களிடம் கூறக் கூடாது என மிரட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளிச்சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவுகொடுத்த பாஸ்கர் என்பவரை கைதுசெய்ய வேண்டும் எனக் கூறி, பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளி முன் திரண்ட 200-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் முழக்கங்களை எழுப்பினர். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காவிடில், களைந்துசெல்ல மாட்டோம் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், பள்ளி வளாகத்தில்வைத்து பாஸ்கரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.