வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (26/07/2018)

கடைசி தொடர்பு:16:55 (26/07/2018)

பவானி ஆற்றில் திடீர் வெள்ளம்! - பரிதவிக்கும் நான்கு கிராம மக்கள்

பவானி ஆற்றில் வெள்ளம்

"பவானி ஆற்றில் தீடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், உயர்மட்டப் பாலம் மூழ்கியது. நான்கு கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டு, அவர்கள் பரிதவிக்கிறார்கள்."

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பொழிவதால், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பிவருகின்றன. மேட்டுப்பாளைத்தை அடுத்த பில்லூர் அணை நிரம்பியுள்ளது. பில்லூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர், பவானி ஆற்றில் பாய்ந்து, பவானிசாகர் அணையை வந்தடைகிறது. அதிகமான தண்ணீர் வரத்தால், பவானிசாகர் அணையின் நீர் மட்டமும் தொடர்ந்து அதிகரித்து, இப்போது 110 அடியை எட்டியுள்ளது.  

இந்நிலையில், நேற்று பவானி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சிறுமுகையை அடுத்துள்ள பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள  காந்தையாறு உயர்மட்டப் பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால், காந்தவயல், ஆலூர், உளியூர் உள்ளிட்ட கிராமங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்தக் கிராம மக்களின் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கிராமங்களில் இரண்டு அரசு ஆரம்பள்ளிகளும், ஒரு அங்கன்வாடி பள்ளியும் உள்ள நிலையில், மாணவர்கள் பள்ளிக்குச் செல்வது கேள்விக்குறியாகி உள்ளது. கூலி வேலைக்குச் செல்வோரும் கடுமையாகப் பாதிக்கபட்டுள்ளனர். மேலும், இந்தப் பகுதிகளில்  நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர்களில் உள்ள  வாழைகளும் வெள்ளத்தில் மூழ்கின.``10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்படி வெள்ளத்தில் சிக்கிக்கொள்வதால், பாலத்தை  30 அடிக்கும் மேல் உயர்த்திக்கட்டி எங்களுக்கு நிரந்தரத் தீர்வு தேடித்தர வேண்டும்’’ என்று கோரிக்கை வைக்கிறார்கள் அந்த மக்கள்.