வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (26/07/2018)

கடைசி தொடர்பு:17:25 (26/07/2018)

`நிர்மலா சீதாராமன் விதிமீறல்செய்தார் என்றால் வள்ளுவரின் குறள்படி சரியே!'- சொல்கிறார் இல.கணேசன்

``100-க்கும் மேற்பட்ட நபர்களின் சிகிச்சைக்காக, இராணுவ விமானத்தை நிர்மலா சீதாராமன் அனுப்பியுள்ளார்'' என பா.ஜ.க எம்.பி., இல.கணேசன் தெரிவித்தார்.

இல கணேசன்

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மீனவர்கள் பாரம்பர்யப்படி நாட்டுப் படகில் வருபவர்களை ஒன்றும் சொல்வதில்லை. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம். நிர்மலா சீதாராமன் அனுமதியைப் பெற்று, ராணுவ விமானத்தைப் பயன்படுத்தியதற்காக ஓ.பி.எஸ்ஸை ஸ்டாலின் ராஜினாமா செய்யச் சொல்வதற்கு இப்போது கருத்து ஏதும்  சொல்ல விரும்பவில்லை. தமிழக அமைச்சர் பயணம்செல்லும் வழியில் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டால், அவர் காயம்பட்டவரை தனது காரில் ஏற்றிச் செல்லுவதை தவறு என்று சொல்லக்கூடிய ஊடகங்கள் உண்டு. அதே நிகழ்வை, சரி என்று சொல்லும் ஊடகமும் உண்டு. இந்தச் சம்பவம் விதி மீறல் என்றால், வள்ளுவரின் குறள்படி சரியே. ஆபத்து ஏற்படுகிறபோது உதவிசெய்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

 எனக்கு தெரிந்தே, 100-க்கும் மேற்பட்ட  நபர்களுக்கு சிகிச்சைக்காக இராணுவ விமானம் அனுப்பியுள்ளார். தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், ஆளுநர் ஆய்வைத் தவறு என்று சொல்கிறார். இதை ஏன் பெரிதுபடுத்துகிறார். கூடுதல் கட்டணம் வசூலித்ததாக சென்னையில் பள்ளி நிர்வாகி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வந்த தகவல் அதிர்ச்சி அடையவைத்தது. லஞ்சம் கொடுத்தவருக்கும் தண்டனை என்ற சட்டத்தை பி.ஜே.பி இயற்றியுள்ளது பெருமைக்குரியது. மத்திய அரசு தலையிட்டு, மாநில அரசை கலைக்கவேண்டிய அவசியம் தற்போது இல்லை.  மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட்டால்தான் நன்மை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை நாங்கள் ஆதரிக்கிறோம். எனது பார்வையில் தமிழக அரசு நன்றாகவே செயல்படுகிறது'' என்று கூறினார்.