‛ஹில்ஸ் சர்வீஸ் சார்ஜ்!’ - ஊட்டி மலை ரயில் கட்டணம் உயர்கிறது

சர்வதேச சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் ஊட்டிக்கு, தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றாலும், அவர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாகத் திகழ்வது, மலை ரயில் பயணம்.  ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு நாள்தாேறும் மலை ரயில் இயக்கப்படுகிறது. ஊட்டியிலிருந்து குன்னுார் வரை டீசல் இன்ஜின் மூலமும், குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் வரை நீராவி இன்ஜின் மூலமும் மலை ரயில் இயக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானாேர், நீராவி இன்ஜின் பாெருத்தப்பட்டு இயங்கும் ரயிலில் பயணிக்கவே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். 

ஊட்டி ரயில் நிலையம்

ஊட்டியில் இருந்து லவ்டேல், கேத்தி, குன்னுார்  வரை முன்பதிவு செய்யாமல் பயணிக்கும் பயணிகளுக்கு, மலை ரயில் கட்டணம் ரூ. 10 ஆகவும், முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு கட்டணம் ரூ. 25 ஆகவும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பயணிகளுக்கு முன்பதிவு செய்யாத கட்டணம் ரூ. 25, முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்குக் கட்டணம் ரூ.30 ஆகவும் தற்போது நடைமுறையில் உள்ளது. இதனால், மலை ரயில் பராமரிப்பது, ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பது எனப் பல்வேறு பாதிப்புகளால் தென்னக ரயில்வே நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 24 கோடி வரை இழப்பு ஏற்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கிறது. இழப்பை ஈடு செய்வதற்காக, வரும் அக்டாேபர் மாதம் 8-ம் தேதி முதல், மலை ரயில் கட்டணத்தை உயர்த்த தென்னக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,‛‛சாதாரனமாக ரயிலில் பயணிப்பவர்களிடம் அடிப்படை கட்டணம் வசூலிக்கப்படுவதுடன், விரைவு ரயில், அதிவிரைவு ரயில் என மாறும்போது கட்டணம் உயரும், அதுபோல, மலை ரயில் மேம்பாட்டுக்காகவும் பராமரிப்புக்காகவும், வரும் அக்டாேபர் 8-ம் தேதி முதல் ‛ஹில்ஸ் சர்வீஸ் சார்ஜ்’  அமல்படுத்தப்பட உள்ளது. தற்பாேதுள்ள கட்டணத்தில் இருந்து 200 ரூபாய் ஊட்டி - மேட்டுப்பாளையத்திற்கு மலை ரயிலில் பயணிப்பவர்களிடம் ‛ஹில்ஸ் சர்விஸ் சார்ஜ்’ ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தற்பாேது ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளிடம் வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.195ல் இருந்து ரூ. 395ஆகவும், ஊட்டி-குன்னுார் இடையேயான கட்டணம் ரூ.142ல் இருந்து ரூ.224 ஆகவும், ஊட்டி - வெலிங்டன் இடையே ரூ.142ல் இருந்து ரூ.218 ஆகவும், ஊட்டி - அருவங்காடு இடையே ரூ.110ல் இருந்து ரூ.175 ஆகவும், ஊட்டி - கேத்தி இடையே ரூ. 5ல் இருந்து ரூ. 135 ஆகவும், ஊட்டி- லவ்டேல் ரூ. 95ல் இருந்து ரூ. 115 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
மலை ரயில் முன்பதிவு செய்து, இரண்டாம் வகுப்பில் ஊட்டி - மேட்டுப்பாளையம் செல்லும் பயணிகளிடம் ரூ.30 ஆக வசூலிக்கப்பட்ட கட்டணத்துடன் ‛ஹில்ஸ் சர்விஸ் சார்ஜ்’ ரூ. 100 உயர்ந்து, ரூ.130 ஆக வசூலிக்கப்படும். அதேபோல, ஊட்டி-குன்னுார் கட்டணம் ரூ.25ல் இருந்து ரூ.65ஆகவும், ஊட்டி-வெலிங்டன் ரூ.25ல் இருந்து ரூ.65 ஆகவும், ஊட்டி-அருவங்காடு ரூ. 20ல் இருந்து ரூ. 55, ஊட்டி-கேத்தி ரூ.20ல் இருந்து ரூ.40ஆகவும், ஊட்டி-லவ்டேல் ரூ.20ல் இருந்து ரூ.30 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாமல் மலை ரயிலில் பயணிப்பவர்களிடம் தற்போது ஊட்டி - மேட்டுப்பாளையம் வரை வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.15ல் இருந்து ரூ.75 ஆகவும், ஊட்டி - குன்னுார் 10 ரூபாயில் இருந்து 35 ரூபாயாகவும் , ஊட்டி-வெலிங்டன் ரூ.10ல் இருந்து ரூ.35 ஆகவும், ஊட்டி - அருவங்காடு ரூ.10ல் இருந்து ரூ.30 ஆகவும், ஊட்டி- கேத்தி ரூ.10ல் இருந்து ரூ.25 ஆகவும், ஊட்டி - லவ்டேல் ரூ.10ல் இருந்து ரூ.15 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது ஊட்டி - குன்னுார் வரை டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படும் மலை ரயில், எதிர்காலத்தில் நீராவி மூலம் இயக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது’’ என்றார். இந்தக் கட்டண உயர்வு, மலை ரயிலை தினசரி போக்குவரத்துக்காகப் பயன்படுத்தி வரும் உள்ளூர்வாசிகளைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதால், உள்ளூர் மக்களுக்கு சிறப்புச் சலுகை வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!