காட்டு யானையைப் பிடிக்க பொள்ளாச்சியிலிருந்து வருகிறது கும்கி! | Kumki comes from Pollachi to catch a single elephant.

வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (26/07/2018)

கடைசி தொடர்பு:18:45 (26/07/2018)

காட்டு யானையைப் பிடிக்க பொள்ளாச்சியிலிருந்து வருகிறது கும்கி!

தேனி மாவட்டம், தேவாரம் பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையைப் பிடிக்க, பொள்ளாச்சியிலிருந்து இரண்டு கும்கி யானைகளை வரவழைக்க இருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்துக்கு வந்திருந்த விவசாயிகள், "தங்கள் பகுதியில் திரியும் ஒற்றை மக்னா யானையால் எங்கள் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. ஆக்ரோஷமான மக்னா யானைக்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை" என்றனர். இதற்குப் பதிலளித்த வனத்துறையினர், "தேவாரம் பகுதியில் சுற்றித்திரிவது மக்னா யானை இல்லை; அது ஒற்றைப் பெண் யானை. அதைப் பிடிப்பதற்காக பொள்ளாச்சியிலிருந்து இரண்டு கும்கி யானைகளை வரவழைக்க இருக்கிறோம். கும்கி யானைகளை அழைத்துவர, இன்று மாவட்ட வனத்துறையினர் பொள்ளாச்சி செல்ல இருக்கின்றனர். எனவே, விரைவில் இந்த பிரச்னை தீரும்" என்றனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவிடம் பேசியபோது, "கும்கி யானையை வரவழைத்து, ஒற்றை யானை வரும் வழிகளில் நிறுத்திவைப்போம். கும்கி யானைகளைப் பார்த்து ஒற்றை யானை பயந்து ஓடிவிடும். அல்லது கும்கியைத் தாக்க வரும். எப்படியோ இந்தப் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும்" என்றார். ''ஒற்றை யானையின் தொடர் அச்சத்தால், தங்களது தோட்டங்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் செல்ல முடியாது தவிக்கும் தேவாரம் பகுதி மக்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்துள்ளனர் விவசாயிகள்.