காவிரி பார்க்க படையெடுக்கும் மக்கள் ... காண முடியாமல் ஏமாறும் சோகம்! | No proper maintenance to view Cauvery river flow, People are returning upset

வெளியிடப்பட்ட நேரம்: 16:56 (26/07/2018)

கடைசி தொடர்பு:16:57 (26/07/2018)

காவிரி பார்க்க படையெடுக்கும் மக்கள் ... காண முடியாமல் ஏமாறும் சோகம்!

மேட்டூரில் நிரம்பி வழியும் காவிரியைக் காண பல மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நாள்தோறும் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். அதேவேளையில் அவர்கள், பாதுகாப்பாகக் காவிரியின் முழு அழகையும் கண்டு ரசித்துச் செல்வதற்கு எந்த முன்னேற்பாடும் செய்யப்படவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுகிறது.

காவிரி பார்க்க படையெடுக்கும் மக்கள் ... காண முடியாமல் ஏமாறும் சோகம்!

காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மேட்டூர் அணை நிரம்பி வழிகிறது. இதையடுத்து, மேட்டூர் அணையைக் காண மக்கள் வெள்ளம் படையெடுக்கிறது. இந்த நிலையில், ஆபத்தை உணராமல் அங்குச் செல்லும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காவிரி

``வான் பொய்ப்பினும் தான் பொய்யா,

மலைத் தலைய கடற்காவிரி,

புனல் பரந்து பொன்கொழிக்கும்'' - என்று சங்க இலக்கியம் தொட்டு இன்றுவரை காவிரியைத் தன் கவிதைக்குள் அடக்காத கவிஞர்களே இல்லை. இந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை முழுவதுமாக நிரம்பி, காவிரி டெல்டா விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி மேட்டூரில் நிரம்பி வழியும் காவிரியைக் காண பல மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நாள்தோறும் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். அதேவேளையில் அவர்கள், பாதுகாப்பாகக் காவிரியின் முழு அழகையும் கண்டு ரசித்துச் செல்வதற்கு எந்த முன்னேற்பாடும் செய்யப்படவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுகிறது. ``தங்கமாபுரி பட்டினம் புதிய பாலத்தின் மீது ஏறி காவிரி ஆற்றையும், அணையின் முழு அழகையும் ரசிக்க முடியாமல் ஏமாந்து செல்கிறோம்'' என்கின்றனர், பொதுமக்கள்.

காவிரியை காண வந்த பொதுமக்கள்

இதுகுறித்து மேச்சேரியைச் சேர்ந்த பிரபு, ``ஐந்து வருடங்களுக்குப் பிறகு, மேட்டூர் அணை நிறைந்து 16 கண் பாலம் வழியாகக் காவிரி ஆறு ஆர்பரித்துச் செல்வதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். இதுபோன்ற அற்புதமான நிகழ்வு எப்போதாவதுதான் ஏற்படுகிறது. அது, இந்த முறை நடந்திருக்கிறது. இந்தக் காட்சியை, மக்கள் தங்குத்தடையின்றி எந்தவித ஓர் ஆபத்தும் நேரிடாத வகையில் அணையின் முழு அழகையும் கண்டு ரசித்து செல்ல அரசு ஏற்பாடு செய்திருந்தால் நன்றாக இருக்கும். ஆனால், எந்த ஒரு முன்னேற்பாடும் செய்யாததால் தங்கமாபுரி பட்டினம் புதிய பாலத்தின் மீது திருவிழாவைப்போல மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. குழந்தைகளோடு பாலத்திலிருந்து பலர் எட்டிப் பார்ப்பதும், இளைஞர்கள் பாலத்தின் ஓரத்தில் நின்று செல்ஃபி எடுப்பதும் ஆபத்தின் அச்சாரமாக இருக்கிறது.

16 கண் பாலத்தின் இடது கடையில் வி.ஐ.பி-க்கள் குடும்பத்தோடு நின்று கடல்போல் காட்சியளிக்கும் அணையின் உட்பகுதியையும், சீறிப் பிரபு பாய்ந்தோடும் வெளிப்பகுதியையும் கண்டு ரசித்துச் செல்கிறார்கள். பணக்காரர்கள், அதிகாரம் படைத்தவர்கள் மட்டும்தான் காவிரியை ரசிக்க வேண்டுமா... பொதுமக்கள் ரசிக்கக் கூடாதா? பொதுமக்கள், அதே இடத்தில் நின்று பார்வையிட்டுச் செல்ல ஏன் அரசு ஏற்பாடு செய்யக் கூடாது? தற்போது நாங்கள் அனைவரும் ஆசையாக வந்தோம். அணையைப் பார்க்க முடியாமல் ஏமாற்றத்தோடு செல்கிறோம்'' என்றார் விரக்தியுடன்.

``வேலைக்குக்கூடச் செல்லாமல் மேட்டூர் அணையையும், அதிலிருந்து பாய்ந்தோடும் காவிரி ஆற்றையும் பார்ப்பதற்காக 80 கி.மீட்டர் தூரத்திலிருந்து வந்திருக்கிறேன். இங்கு, பொதுமக்கள் பார்வைக்காக எந்த ஒரு முன்னேற்பாடும் செய்யவில்லை. எல்லோரும் தங்கமாபுரி பட்டினம் புதிய பாலத்தின்மீது நின்றுதான் காவிரி ஆற்றின் அழகை ரசிக்கிறார்கள். இந்தப் பாலம் முழுவதும், திருவிழாவைப்போல கூட்டமாக இருக்கிறது. எட்டிநின்று காவிரி ஆற்றை ரசிக்கும்போது பொதுமக்களில் சிலருடைய செல்போன்கள் தண்ணீருக்குள் விழுந்துவிடுகின்றன. ஆகவே, பொதுமக்கள் காவிரி ஆற்றைப் பாதுகாப்பாகப் பார்த்துவிட்டுச் செல்ல அரசு சிறப்பு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். வி.ஐ.பி-க்கள் மட்டும் அதிகாரிகளின் அனுமதியோடு 16 கண் பாலத்தின் இடது கரையில் பத்திரமாக நின்று காவிரியின் முழு அழகையும் பார்த்து ரசித்துவிட்டுச் செல்கிறார்கள். எங்களுக்கு அதுபோன்ற வாய்ப்பு இல்லை'' என்கிறார், ஜெகதீஷ்

வியாபாரியான குணசேகரன், ``காவிரி ஆறு கரைபுரண்டு ஓடுவதால் தங்கமாபுரி பட்டினம் புதிய பாலத்தின் மீது மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அதைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் முன்னெச்சரிக்கையாகப் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்'' என்றார்.

பொதுமக்கள்

மேட்டூர் அணையின் செயற்பொறியாளர் தேவராஜன், ``மக்களின் பாதுகாப்பையும், அணையின் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு மாவட்ட நிர்வாகம் சொல்லியிருக்கிற விதிமுறைகளைப் பின்பற்றி வருகிறோம். மேட்டூர் அணையில் தண்ணீர் அதிக அளவில் இருப்பதாலும், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதாலும் மக்களின் பாதுகாப்பைக் கருதி அங்கு பொதுமக்களும், வி.ஐ.பி-க்களும் செல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுப்பதற்கு மட்டுமே அனுமதித்திருக்கிறோம்'' என்றார்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close