வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (26/07/2018)

கடைசி தொடர்பு:19:00 (26/07/2018)

`சஞ்சய் தத்தின் தண்டனை குறைப்பு!’ - மத்திய தகவல் ஆணையத்துக்கு பேரறிவாளன் கேள்வி

சி.பி.ஐ உள்ளிட்ட மத்திய விசாரணைப் பிரிவுகளின் கீழ், சிறையிலிருக்கும் கைதிகளை முன்னதாக விடுவிக்கும் வழிமுறைகள்குறித்து மத்திய தகவல் ஆணையத்தில் பேரறிவாளன் தாக்கல்செய்த மேல்முறையீட்டு மனு, நாளை மத்திய தகவல் ஆணையர் முன்பு விசாரணைக்கு வருகிறது. 

பேரறிவாளன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும், 2014-ம் ஆண்டு குற்ற விசாரணை முறைச்சட்டம் பிரிவு 432-ன் கீழ் தண்டனைக் குறைப்புசெய்து விடுதலை செய்வதற்கு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முடிவு எடுத்தார். அவர்களை விடுவிப்பதுகுறித்து கருத்துக் கேட்டு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். அப்போது, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, ஜெயலலிதாவின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்து எழுவர் விடுதலைக்கு இடைக்காலத் தடையாணை பெற்றது.

மேலும், இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த வழக்கில், குற்ற விசாரணை முறைச்சட்டம் பிரிவு 435(2)ன் படி மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ்(தடா, பொடா, ஆயுத தடைச்சட்டம், வெடிபொருள் சட்டம்) தண்டிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசே தண்டனைக் குறைப்பு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை அடிப்படையாக வைத்து, பேரறிவாளன் 2016-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 7(1) கீழ் சில தகவல்களைக் கோரினார்.

பேரறிவாளன் கோரிய தகவல்களில் முக்கியமானவை :

1.மத்திய அரசு ஶ்ரீகரன் என்கிற முருகன் வழக்கில் 2-12-2015 அன்று அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பின்படி அரசியல் சாசனம் உறுப்பு 72 மற்றும் 73 ஆகியவற்றின் கீழ் மத்திய அரசு தண்டனை குறைப்பு விதிகள் இயற்றியிருப்பின் அதன் நகல். 

2.ஶ்ரீகரன் வழக்கில் குற்ற விசாரணை முறைச்சட்டம் பிரிவுகள் 432, 433, 433A,434 மற்றும் 435 ஆகியவற்றின் கீழ் மத்திய அரசு தண்டனை குறைப்பு விதிகள் இயற்றியிருப்பின் அதன் நகல்

3.மேற்கூறிய அரசியல் அமர்வில் குறிப்பிட்டபடி மத்திய அரசின் விசாரணையின் கீழ் உள்ள வழக்குகளில் மாநில அரசுகள் தண்டனை குறைப்பு செய்தது, அல்லது மாநில அரசு அறிவித்த விடுதலையை எதிர்த்து மத்திய அரசு ஏதேனும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தால் அதன் நகல்

4.மத்திய அரசின் விசாரணையின் கீழ் வழக்குகளில் இந்தியா முழுமையும் உள்ள சிறைகளில் 1-1-2010 முதல் 31-12-2015 வரை மத்திய அரசால் தண்டனை குறைப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களின் உத்தரவு நகல்

ஆனால், பேரறிவாளன் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல், மத்திய உள்துறை அமைச்சகம் இழுத்தடித்துள்ளது. அதையடுத்து, உள்துறை அமைச்சகத்துக்கு 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேல்முறையீடு செய்தார். மீண்டும் உள்துறை அமைச்சகம் தகவல் தராமல் அலைக்கழித்தது. அதையடுத்து, ஜூலை மாதம் 2016-ம் ஆண்டு, மத்திய தகவல் ஆணையம் முன்பு பேரறிவாளன் இரண்டாவது முறையாக மேல்முறையீடு செய்தார். மத்திய தகவல் ஆணையத்தில் பேரறிவாளன் செய்த மேல்முறையீடு, மத்திய தகவல் ஆணையர் யஷோவர்தன் ஆசாத் முன்பு நாளை இறுதி விசாரணைக்கு வருகிறது. 

மத்திய புலனாய்வு அமைப்பின் கீழ் விசாரணை நடைபெற்று மாநில ஆளுகைக்குட்பட்டு தண்டனை அனுபவித்துவரும் சிறைக் கைதிகளின் தண்டனை குறைப்பு குறித்து பரீசிலனை செய்ய மத்திய அரசு எந்த விதிமுறைகளைப் பின்பற்றுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்காகவே இதுகுறித்த தகவல்கள் கோரப்பட்டுள்ளது என்று பேரறிவாளன் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

இந்த விசாரணையில் பேரறிவாளன் கோரிய தகவல்களுக்கு உரிய பதில் கிடைக்கும்பட்சத்தில், '257 பேர் பலிக்கு காரணமான மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தடா சட்டத்தின்கீழ் வழக்கு நடந்து மத்திய புலனாய்வு துறையால் விசாரிக்கப்பட்டு இறுதியில் மத்திய அரசின் மொத்த ஆளுகைக்குட்பட்ட தண்டனைப் பிரிவான ஆயுத சட்டத்தின் கீழ், 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத்துக்கு 8 மாதங்கள் எவ்வாறு தண்டனை குறைப்பு வழங்கப்பட்டது? அதில் மத்திய அரசு ஏன் தனது அதிகாரத்தைக் கோரவில்லை? ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மட்டும் மத்திய அரசு தலையிட என்ன காரணம்? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.