வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (26/07/2018)

கடைசி தொடர்பு:18:15 (26/07/2018)

``பயமா இருக்குப்பான்னு சொன்ன மகளைப் பறிகொடுத்துட்டேன்!''- கலங்கும் கிருத்திகாவின் தந்தை

``பொறக்குறது எங்க அப்பாதான். அந்த மனுசன் ஆஸ்பத்திரிக்கே போகாம வாழ்ந்தவரு. நமக்குப் புள்ளையா பிறக்கப் போறாரு!"

பிரசவம்... கருவாகத் தன்னுள் பொத்தி வைத்திருக்கும் உயிரை, தன் உயிரைப் பணயம் வைத்து உருவாக உந்தித்தள்ளும் நிமிடங்கள், கணவன் மனைவி இருவருக்கும் உடலாலும் மனதாலும் அது மறுபிறப்புதான். திருப்பூர் அருகே பிரசவத்துக்குத் தயாரான பெண்ணுக்கு நடந்த அந்தச் சம்பவம், தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது. பலரின் இதயங்களைப் பதற வைத்திருக்கிறது. 

கிருத்திகா

திருப்பூர் அருகேயுள்ள புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர், தன் மனைவி கிருத்திகாவுக்கு யூடியூப் பார்த்து இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம் பார்க்க நினைத்திருக்கிறார். அந்த விபரீதம், கிருத்திகாவின் உயிரைப் பறித்திருக்கிறது. என்ன நடந்தது என அறிய கிருத்திகாவின் தந்தையைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினோம். 

``நீங்க யாரு? எங்கிருந்து கூப்புடுறீங்க? ஒரு விஷயத்தைத் தெரிஞ்சுக்கோங்க. நாங்க கௌரவமான குடும்பம். சும்மா போன் பண்ணி உயிரை வாங்காதீங்க. கிருத்திகா எங்க பொண்ணுதான். ஆனால், எப்போவோ கார்த்திகேயனுக்குப் பொண்டாட்டி ஆகிட்டா. எதுவா இருந்தாலும் மருமகனுக்கு போன் போட்டுப் பேசுங்க. மகள் போன துக்கத்தைவிட இப்படி போன் வருதேன்னு நினைச்சுத்தான் அழுது தீர்க்கவேண்டியிருக்கு" எனக் கோபத்துடன் சட்டென இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

நாம் விடாமல் மீண்டும் மீண்டும் அழைத்தோம். ஒருகட்டத்தில் எடுத்துப் பேசினார். இந்த முறை குரலில் கோபம் குறைந்திருந்தது.

``மன்னிச்சிடுங்க தம்பி. புள்ளையைப் பறிகொடுத்த துக்கத்தில் பேசிட்டேன். இந்தப் பாவிப் பய இப்படிப் பண்ணிட்டேனே. ஆசை ஆசையா வளர்த்த பொண்ணு. `வீட்டுல பிரசவம் பார்க்கிறது சரியாப்பா. எனக்கு பயமா இருக்கு'னு என்கிட்ட சொன்னாள். ஆனால், மருமகன் பேச்சைக் கேட்டு அமைதியா இருந்து மகளைப் பறிகொடுத்துட்டேன். கிருத்திகா என் மூத்த மகள். ஸ்கூல் டீச்சரா வேலை பார்த்துட்டிருந்தா. மருமகனும் தங்கமான குணம்தான். புள்ளையை நல்லா பாத்துக்கிட்டாரு. ஆனா, சேர்ந்த சகவாசம் புத்தியை மழுங்க வெச்சிருக்கு. அவரோட ஃப்ரெண்டு ஒருத்தரு வீட்டுக்குப் போறதும் வர்றதுமா இருந்தார். அந்தப் பையனோட பொண்டாட்டிக்கு வீட்டுலேயே பிரசவம் பார்த்தாங்களாம். `தங்கச்சிக்கும் இப்படியே பிரசவம் பார்த்துடலாம்டா'னு அந்தப் பையன் சொல்லியிருக்கார். 

கிருத்திகா

அதுமட்டுமா? என் மருமகனோட அப்பா 75 வயசுல இறந்து போனாரு. அவர் வாழ்ந்த வரை எந்த ஆஸ்பத்திரிக்கும் போனதில்லை. ஏற்கெனவே, என் மகளுக்கு அஞ்சு வயசுல ஒரு பொம்பளப் புள்ளை இருக்கு. `இந்தமுறை ஆம்பளப் புள்ள பொறக்கும். எங்க அப்பாதான் பொறப்பார். அவர் ஆஸ்பத்திரிக்கே போகாம வாழ்ந்தவரு. அதனால, ஆஸ்பத்திரி வேணாம்'னு கிருத்திகாட்ட சொல்லியிருக்கார். என் மகளுக்கு பயமா இருந்துச்சு. `இது சரியா? வீட்டுல வெச்சே குழந்தையைப் பெத்துக்க முடியுமா?'னு கேட்டுட்டே இருப்பா. `அதெல்லாம் சரியா வராதும்மா. உனக்கு பயமா இருந்தா, ஒத்துக்காதே'னு சொன்னோம். மருமகனிடமும் இதெல்லாம் சரியா வராதுன்னு சொல்லிப் பார்த்துட்டோம். `அதெல்லாம் பார்த்துக்கலாம் மாமா. டெலிவரியை நாங்களே பார்த்துக்கிறோம். வலி வந்ததும் சொல்லி அனுப்புறோம்'னு சொல்லிட்டார்.

வர்ற ஒண்ணாம் தேதிதான் டெலிவரி ஆகும்னு நினைச்சு அசால்ட்டா இருந்தோம். ஆனா, போன ஞாயிற்றுக்கிழமையே வலி வந்திருக்கு. நாங்க பக்கத்துலதானே இருக்கோம். ஆனா, எங்களுக்குத் தகவலே கொடுக்கலை. பொறந்த புள்ளையே காயத்தோடு வெளியில வந்திருக்கு. அப்படின்னா, என் பொண்ணு எவ்வளவு துடிச்சிருக்கும். நெனைச்சே பார்க்க முடியலை தம்பி. அஞ்சு வயசுல ஒண்ணு, அஞ்சு நாள்கூட ஆகாத ஒண்ணு எனத் தாய் இல்லாம ரெண்டு குழந்தைகள் தவிச்சுக் கெடக்குதுங்க" எனக் கதறுகிறார் கிருத்திகாவின் தந்தை.

யூடியூப் சேனல் மூலம் சுயமாகப் பிரசவம் பார்த்துவிடலாம் என்று நினைத்து, முன்பின் அனுபவமே இல்லாமல் பிரசவம் மேற்கொண்டதன் விளைவு, இரண்டு குழந்தைகள் தங்கள் தாயை இழந்துள்ளன. 


டிரெண்டிங் @ விகடன்