வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (26/07/2018)

கடைசி தொடர்பு:19:30 (26/07/2018)

`நதிநீர் பிரச்னைகள் மேலும் சிக்கலாகும்!’ - அணை பாதுகாப்பு மசோதாவைச் சாடும் சீமான்

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா, மாநில அரசின் தன்னாட்சி அதிகாரத்தைப் பறிக்கும் படுபாதகச் செயல்  என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

சீமான்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்தொழித்து அரசியலமைப்புச் சாசனம் வழிகாட்டும் கூட்டாட்சித் தத்துவத்தின் மாண்பைக் குலைத்து அதிகாரக் குவிப்பில் ஈடுபட்டு பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, தற்போது அணை பாதுகாப்பு மசோதா எனும் பெயரில் அணைகள் மீதான மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்திட முயல்வது தன்னாட்சி அதிகாரத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள பெரும் போராகும். ‘அணைகள் பாதுகாப்பு - 2018’ எனும் இம்மசோதாவை கடந்த 13.6.2018 அன்று நிறைவேற்றியுள்ள மத்திய அமைச்சரவையானது, அதை மழைக்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றுவதற்கான வேலைகளை முடுக்கிவிட்டிருப்பது எதேச்சதிகாரப் போக்கின் மூலம் மாநில உரிமையைப் பறிக்கும் படுபாதகச் செயலாகும்.

அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் அணைகளைக் கொண்டுள்ள நாடாக இந்தியா விளங்குகிறது. நாடு முழுவதும் 5,254 பெரிய அணைகள் கட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக 4,47 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன. மத்திய அரசு கொண்டுவரும், இப்புதிய மசோதாவின் மூலம் அணைகள், நீர்த்தேக்கங்கள் மீதான மாநிலங்களின் உரிமையும் கட்டுப்பாடும் முற்றிலும் பறிக்கப்பட்டுவிடும்.

ஒரு மாநிலத்தால் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்பட்டு, மற்றொரு மாநிலத்திலுள்ள அணைகள் குறித்தான உரிமைகளும் கட்டுப்பாடுகளும் இம்மசோதா மூலம் மத்திய அரசுக்கு மாற்றப்பட்டுவிடும் என்பதால் தமிழகத்தால் நிர்வகிக்கப்பட்டுக் கேரளாவில் நிறுவப்பட்டிருக்கும் முல்லை பெரியாறு, பெருவாரிப்பள்ளம், பரம்பிக்குளம் போன்ற அணைகளின் மீதான நிர்வாக உரிமை தமிழகத்திடமிருந்து அபகரிக்கப்பட்டுவிடும் அபாயமிருக்கிறது. இரு மாநிலத்துக்கு இடையேயான நெடுநாள் ஒப்பந்தங்கள் யாவும் தள்ளுபடி செய்யும் வகையில் இம்மசோதா வடிவமைக்கப்பட்டிருப்பதால், இதன்மூலம் அண்டை மாநிலங்களுடான தமிழகத்தின் நதிநீர் உரிமைகள் மேலும் சிக்கலாகும்.

முல்லை பெரியாறு போன்ற 4 அணைகள் கேரளாவில் அமையப் பெற்றிருந்தாலும் அவை, தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. மேற்குத் தமிழகத்தில் பெரும் பாசனப் பரப்புக்கான நீராதாரமாக விளங்கும் பரம்பிக்குளம் அணையானது கேரளாவிலிருந்தாலும் அதன் கட்டுப்பாட்டு உரிமை முழுவதும் தமிழகத்துக்கே உரித்தானது. மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய அணை மசோதாவின் மூலம் தமிழகத்தின் இத்தகைய அணைகள் மீதான கட்டுப்பாடுகளும் உரிமைகளும் முற்றிலும் மறுக்கப்படும். அவற்றைப் பாதுகாப்பதற்குரிய எந்த வழிவகைகளும் இம்மசோதாவில் வரையறுக்கப்படவில்லை. ஏற்கெனவே, அண்டை மாநிலங்கள் தமிழகத்துக்குரிய நதிநீர் உரிமைகளை மறுத்து சதிராட்டம்போட்டு வரும் நிலையில் புதிதாகக் கொண்டு வரப்படும் இம்மசோதா, அம்மாநிலங்களின் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளுக்கு மேலும் வலுசேர்க்கும் விதம் அமையும் என்பதன் மூலம் இதிலுள்ள ஆபத்தை உணர்ந்து கொள்ளலாம்.

அணைகள் பாதுகாப்பு - இந்திய அரசியலமைப்புச் சாசனத்தில் மாநிலப் பட்டியல் பிரிவு 17-ல் உள்ளது. பொதுப்பட்டியல் அதிகாரங்களில் அத்துமீறி ஆக்கிரமிப்புச் செய்து வந்த மத்திய அரசு, தற்போது மாநிலப் பட்டியல் பிரிவு 17-ல் இருக்கும் அதிகாரத்திலும் கைவைக்கத் தொடங்கியிருப்பது பெரும் அதிகார அத்துமீறல்; இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிரான பெரும் சனநாயகத் துரோகமாகும். ஏற்கெனவே, சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ஷினோத் எனும் ஆற்றைத் தனியாருக்குத் தாரைவார்த்த நிகழ்காலக் கொடுமையும் இந்நாட்டில்தான் நடந்திருக்கிறது என்பதன் மூலம் நீர்வளத்தைத் தனியார்வசமாக்கலின் ஒருமுகமாகவே மத்திய அரசால் இம்மசோதா கொண்டு வரப்படுகிறது என்கிற ஐயப்பாட்டில் உண்மை இல்லாமலில்லை.

மாநில அரசின் உரிமைக்கு இவ்வளவு பாதிப்பு இருந்தும் மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் தமிழகத்துக்குப் பாதிப்பில்லை என்று சொல்வது கடைந்தெடுத்த பொய். மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கொண்டு வரும் இப்புதிய மசோதாவுக்கு எதிராகத் தமிழக அரசு ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பியிருப்பது வரவேற்கத்தக்கது. எனவே, அதை மதித்து மத்திய அரசு மாநிலங்களின் தன்னாட்சி உரிமை காவுவாங்கும் இப்புதிய அணைகள் மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.