வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (26/07/2018)

கடைசி தொடர்பு:20:23 (26/07/2018)

`இங்கு வருபவர்கள் துணிப்பையுடன் வரவும்’ - பிரசாரத்தைத் தொடங்கிய நகராட்சி!

'அடுத்த ஆண்டு, பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்படும்' என்று தமிழக அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து, பெரும் வியாபாரிகள் முதல் சிறு வியபாரிகள் வரை தங்களது கடை மற்றும் நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகளை (கேரிபேக்) பயன்படுத்துவதைக் குறைத்துக்கொண்டனர். அதுதவிர, வியாபாரிகள் சங்கத்தின்மூலம் பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு எதிராக தீர்மானம் போடப்பட்டதுடன், ஒவ்வொரு கடையிலும் 'இங்கு பிளாஸ்டிக் பைகள் கிடையாது. பொருள்களை வாங்க வரும் பொதுமக்கள் வீட்டிலிருந்து துணிப்பைகளை எடுத்து வரவேண்டும்' என்று சில வியாபாரிகள் தங்களது கடைகளில் விளம்பர நோட்டீஸ் ஒட்டி வைத்துள்ளனர். 

துணிப்பை

 திருவள்ளூர் நகரில் பல கடைகளில், அதாவது செல்லப்பிராணிகளுக்கு உணவுப் பொருள்கள் விற்கும் கடை , பழச்சாறு விற்கும் கடை மற்றும் பெட்டிக்கடைகளில், பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், தங்கள் கடையில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை என்றும் விளம்பர போர்டு வைத்துள்ளனர். தள்ளுவண்டிக்  கடைகளில் இலைகளுக்குப் பதிலாக பாலித்தீன் பேப்பர்களைப் பயன்படுத்திவந்தனர். அரசின் உத்தரவுக்குப் பிறகு, பல கடைகளில் வாழை இலைகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். ஆனால், மாவட்டம் முழுவதும் உள்ள கடைகாரர்கள் பிளாஸ்டிக் பைகளின்  தடைக்கு ஆதரவளித்தால், விரைவில் முற்றிலுமாக பிளாஸ்டிக்கின் பயன்பாடை ஒழித்துவிடலாம் என்கிறார்கள் அதிகாரிகள்.