வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (26/07/2018)

கடைசி தொடர்பு:22:00 (26/07/2018)

ரூ.8,000 வரிக்கு 4,000 ரூபாய் லஞ்சம்! - லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் சிக்கிய நகராட்சி ஊழியர்

ராமநாதபுரம் நகராட்சியில், சொத்து வரியைக் கூடுதலாகப் போடாமல் இருக்க, ரூ.4,000 லஞ்சம் வாங்கியதாக வருவாய்ப் பிரிவு உதவியாளர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து கணக்கில் வராத ரூ.12,000 கைப்பற்றப்பட்டது.

ராமநாதபுரம் நகராட்சியில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீஸார்

ராமநாதபுரம் புளிக்காரத் தெருவில் வசித்துவருபவர் கணேசன் (47).  இவர், ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் வருவாய்ப் பிரிவு உதவியாளராகப் பணியாற்றிவருகிறார். ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோயில் தெருவில் வசித்துவரும் குமார் என்பவருக்குச் சொந்தமான 1312.5 சதுர அடி காலிமனை இடத்துக்கு சொத்து வரியைக் கூடுதலாகப் போடாமல் இருக்க, ரூ.4,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து குமார், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, அவர்கள் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கணேசனிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி இன்று நகராட்சி அலுவலகத்துக்குச் சென்ற குமார், அங்கிருந்த கணேசனிடம் ரூ.4,000 லஞ்சமாகக் கொடுத்துள்ளார். அப்போது, நகராட்சி அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி உன்னிகிருஷ்ணன், ஆய்வாளர் ஜானகி தலைமையிலான போலீஸார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கணேசனிடம் இருந்து கைப்பற்றினர். மேலும், கணக்கில் வராத தொகை ரூ.8,000-த்தை கணேசனிடமிருந்து போலீஸார் பறிமுதல்செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக நகராட்சி அலுவலக வருவாய்ப் பிரிவு ஊழியர்கள் சிலரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர்.