வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (26/07/2018)

கடைசி தொடர்பு:23:00 (26/07/2018)

தூத்துக்குடி - சென்னை இடையே மூன்று விமான சேவைகள்! இண்டிகோ நிறுவனம் தொடங்கியது

``இண்டிகோ விமான நிறுவனத்தின் மூலம் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு  மூன்று நேரடி விமான சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளது. இதன்மூலம் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு தினமும்  ஐந்து விமான சேவைகள் மற்றும் பெங்களூருவுக்கு ஒரு விமான சேவை என மொத்தம் ஆறு விமான சேவைகள் இயக்கப்படும்” என விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தென் மாவட்டங்களில், மதுரை விமான நிலையத்துக்கு அடுத்தபடியாக உள்ளது, தூத்துக்குடி விமான நிலையம். கடந்த 1992-ம் ஆண்டு முதல் இங்கு விமான சேவை நடைபெற்றுவருகிறது. ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம், தினசரி  இரண்டு விமான சேவைகளை தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு இயக்கிவருகிறது. இத்துடன், கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் தூத்துக்குடியிலிருந்து பெங்களூருவுக்கும் விமான சேவையைத் தொடங்கியது.

இந்நிலையில், உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, இன்று (26.07.18) முதல் தினசரி  3 நேரடி விமான சேவைகளைத் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்குத் தொடங்கியுள்ளது. 61 பயணிகளுடன் சென்னையிலிருந்து புறப்பட்டு தூத்துக்குடி வந்த இண்டிகோ விமானத்தை,  இரண்டு தீயணைப்புத்துறை  வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து, மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பூங்கொத்துகள், இனிப்புகள் கொடுத்து விமான நிலைய அதிகாரிகள் பயணிகளை வரவேற்றனர்.    

இண்டிகோ விமான சேவைகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன், “இண்டிகோ நிறுவனத்தின்மூலம் தூத்துக்குடி மற்றும் சென்னைக்கு இன்று முதல் தினசரி 3 விமான சேவை துவக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தினமும் அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட்டு காலை 7.30 மணிக்கும், காலை 10.25 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.05 மணிக்கும் மற்றும் மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கும் தூத்துக்குடிக்கு வந்தடையும்.  இதேபோல, தூத்துக்குடியில் இருந்து தினசரி காலை 7.55 மணிக்குப் புறப்பட்டு காலை 9.30 மணிக்கும், மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கும், மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு மாலை 6.15 மணிக்கும் சென்னை சென்றடையும்.

இண்டிகோவின் இந்த விமான சேவைகள் தூத்துக்குடி மக்களுக்கு மட்டுமில்லாமல், திருநெல்வேலி, காயல்பட்டினம், திருச்செந்தூர், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் இதனைச் சுற்றியுள்ள அனைத்து ஊர் மக்களுக்கும் பயனுள்ளதாகவும் தேவையுள்ளதாகவும் இருக்கும். இண்டிகோவின் இந்த மூன்று விமானசேவைகளையும் சேர்த்தால், தூத்துக்குடி விமானநிலையத்திலிருந்து நாள் ஒன்றுக்கு  சென்னைக்கு  ஐந்து விமானமும் மற்றும் பெங்களூருவுக்கு  ஒரு விமானமும் என மொத்தம் ஆறு விமான சேவைகள் நடைபெறும்.

சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரு வழித்தடத்திலும் சேர்த்து, 900  பயணிகளை தூத்துக்குடி விமான நிலையம் ஏற்றிச் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு சரக்கு விமான சேவை விரைவில்  தொடங்க உள்ளது. அத்துடன், இங்கிருந்து மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களுக்கும் விமான சேவை  தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க