நேற்றைய இரவு கோபாலபுரம் எப்படி இருந்தது? நேரடி ரிப்போர்ட்! | How was the situation whole night in gopalapuram

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (27/07/2018)

கடைசி தொடர்பு:08:28 (27/07/2018)

நேற்றைய இரவு கோபாலபுரம் எப்படி இருந்தது? நேரடி ரிப்போர்ட்!

நேற்றைய இரவு கோபாலபுரம் எப்படி இருந்தது? நேரடி ரிப்போர்ட்!

தி.மு.க., தலைவர் கருணாநிதி பற்றிய வதந்தியால் நேற்றைய இரவு தமிழ்நாடே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தது. கருணாநிதிக்கு என்ன ஆச்சு? யாரைப்பார்த்தாலும் இந்தக் கேள்விகளால் துளைத்துக்கொண்டிருந்தார்கள். இந்த வதந்தி தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு புதிதல்ல... ஆனால், மற்ற தினங்களில் உருவான வதந்தியின் அதிர்ச்சியைவிட நேற்றைய தினம் உருவான வதந்தியின் அதிர்ச்சிக்கு சென்னை மாநகரமே ஸ்தம்பித்து நின்றது. ``வயதுமூப்பின் காரணமாக உடல் நலிவு ஏற்பட்டுள்ளது. மேலும், சிறுநீரகத் தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது" என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தி காட்டுத்தீ போல தமிழகம் முழுவதும் பரவியது.

துணை முதல்வர் பன்னீர் செல்வம்

இதனால் பல்வேறு கட்சித் தலைவர்கள் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு படையெடுக்கத் தொடங்கினர். இதனால்தான் தி.மு.க-வின் தொண்டர்கள் பயம் கொள்ள ஆரம்பித்தனர். நேற்றைய இரவு தி.மு.க நிர்வாகிகள், தி.மு.க தொண்டர்கள் மட்டுமல்லாது, மொத்த தமிழ்நாடும் தூங்கா இரவாகதான் இருந்தது. இதில் கோபாலபுரம் அதிர்ச்சியின் உச்சம்!

கோபாலபுரம்

வதந்திகள் வரத்தொடங்கியதும் தி.மு.க தொண்டர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோபாலபுரத்தை தஞ்சம் அடைந்தனர். தமிழகத்தின் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன், அகில இந்திய சமத்துவ கட்சித் தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கோபாலபுரம் வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து தெரிந்துகொண்டனர். ஆனால், எந்த அரசியல்கட்சித் தலைவர்களும் கருணாநிதியின் உடல்நலம் கருதி அவரை, சந்திக்கவில்லை. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டுத் தெரிந்துகொண்டனர். 

கோபாலபுரம்

தொண்டர்கள் அனைவரும் ``உண்மையைச் சொல்லுங்கள்... கலைஞர் எப்படி இருக்கிறார்" என கோபாலபுரம் வீட்டின் முன்பு கதறி அழ ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் கோபாலபுரத்தில் மேலும் பதற்றமான சூழ்நிலை உருவானது. இந்தச் சூழ்நிலை தமிழகத்தையே பதற்றமான சூழ்நிலையில் தள்ளிவிடும் என்பதால் தி.மு.க உயர்மட்ட நிர்வாகிகள் தொண்டர்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், தொண்டர்களின் வருகை அதிகரித்ததே தவிர குறையவில்லை. இதனால், காவலர்களும் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டனர். இரவு 11 மணிக்கு மேல் வீட்டினுள் இருந்த தி.மு.க உயர்மட்ட நிர்வாகிகள் கிளம்பத் தொடங்கினார்கள். 

கோபாலபுரம்

அதன்பிறகு 11.30 மணியளவில் ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு கிளம்பிவிட்டார். ஆனாலும் கருணாநிதியின் உடல்நிலையை பற்றிய உண்மை நிலை தெரிந்தாக வேண்டும் எனத் தொண்டர்கள் வீட்டுக்கு முன்பே காத்திருந்தார்கள். எவ்வளவோ சொல்லியும் தொண்டர்கள் கலைந்து செல்லாததால், வீட்டின் லைட்கள் அணைக்கப்பட்டு, கேட்கள் மூடப்பட்டன. இதனிடையே பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோபாலபுரம் வந்தார். ஆனால், ஸ்டாலின் கோபாலபுரத்திலிருந்து சென்றுவிட்டதால் அவரும் பாதியிலேயே திரும்பிவிட்டார். தொண்டர்களின் வருகையை குறைப்பதற்காக இரவு 1 மணியளவில் கோபாலபுரத்துக்கு செல்லும் வழிகள் அனைத்தும் மூடப்பட்டன. பல காவலர்களும் கோபாலபுரத்துக்கு வரவழைக்கப்பட்டனர். பேரிகார்டுகள் நிறைந்த காவல்துறை வாகனங்கள் கோபாலபுரம் சுற்றிய பகுதிகளில் நிறைய இடங்களில் காண முடிந்தது. தி.மு.க தொண்டர்கள் பலர் இரவு முழுவதும் வீட்டுக்கு முன் கண் விழித்துக்கொண்டும், சிலர் அங்கேயே சாலையில் படுத்தும் அந்த இரவை கழித்தனர்.