சூயஸ் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் ஏன்?- ஜி.ராமகிருஷ்ணன் அதிர்ச்சித் தகவல்!

ஜி ராமகிருஷ்ணன்

`குடிநீரை வியாபாரப் பொருளாகவும், வணிகமாகவும் மாற்றுவதுதான் கோவை மாநகராட்சிக்கும் சூயஸ் நிறுவனத்துக்குமான ஒப்பந்தம்' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கோவையில் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``மின்சாரம், பெட்ரோல், டீசல் போல குடிநீரையும் காசு கொடுத்து வாங்கலாம் என்று நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருப்பது சட்டத்துக்கு எதிரானது. 24 மணி நேரம் குடிநீர் என்பதெல்லாம் ஏமாற்று வார்த்தைகள். 

சூயஸ் நிறுவனம் கோவைக்கு வந்திருப்பது பெருமைக்குரியது என்று கூறுவது கேலிக்குரியது. வறட்சி மாவட்டமாக உள்ள சிவகங்கை, கோவில்பட்டி போன்ற நகரங்களுக்குச் சென்று குடிநீரை விநியோகிக்கும் பணியில் ஈடுபடாமல், சிறியதும் பெரியதுமாக 11-க்கும் மேற்பட்ட அணைகள், ஏராளமான நீர்நிலைகள், நீராதாரங்கள் உள்ள இந்தக் கோவை மாவட்டத்தைக் குறி வைத்து வருவதன் காரணம் என்ன? குடிநீருக்கான கட்டணத்தை அரசு நிர்ணயிக்கும் என சொல்கிறார்கள். சூயஸ் நிறுவனம் நிர்ணயிக்கும் கட்டணத்தை மாநகராட்சி செயல்படுத்தும். இதுதான் இதில் உள்ள சூட்சமம்.

மேலும், படிப்படியாக பொதுக்குழாய்களை அகற்றிவிட்டு குடம், தொட்டி போன்றவைகளில் தண்ணீரை தேக்கி வைக்கக் கூடாது என அதிகாரிகள் ஆரம்பத்திலேயே சொல்வதற்கான காரணம் என்ன தெரியுமா? சூயஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் அப்படிதான் சொல்லப்பட்டிருக்கிறது. அதை  அதிகாரிகள் அப்படியே மக்களிடம் தெரிவிக்கிறார்கள். இதேபோல, வீட்டின் பரப்பளவு, பயன்பாடுக்கு ஏற்ப குடிநீர் கட்டணத்தை நிர்ணயிப்பது என்பது தமிழகத்தில் எந்த மாநகராட்சி, நகராட்சிகளிலும் இல்லாத ஒன்று, இதுவும் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருக்கிற ஒன்றுதான். 

குடிநீரை வியாபாரப் பொருளாகவும், வணிகமாக மாற்றுவதுதான் கோவை மாநகராட்சிக்கும் சூயஸ் நிறுவனத்துக்குமான ஒப்பந்தம். அதனால்தான் இந்தத் திட்டம் தொடர்பாக போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை அரசு இதுவரை வெளியிடவில்லை. கோவை மாநகர மக்கள் எதிர்நோக்க உள்ள குடிநீர் அபாயத்தைக் கண்டித்து வரும் 31-ம் தேதி அனைத்துக் கட்சிகள் சார்பாக மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!