வெளியிடப்பட்ட நேரம்: 10:57 (27/07/2018)

கடைசி தொடர்பு:10:59 (27/07/2018)

கருணாநிதி வீட்டுக்கு மருத்துவக் குழு வருகை - போலீஸ் குவிப்பு #Karunanidhi

கருணாநிதியின் உடல்நிலையைச் சோதனை செய்யக் காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக்குழுவினர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தனர்.

கருணாநிதி

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாததால் சில காலங்களாகவே அவர் அரசியலிலிருந்து ஒதுங்கி ஓய்வெடுத்து வருகிறார். அவர் பொதுக்கூட்டங்கள், பிரசாரங்களில் பங்கேற்று நீண்ட காலமாகிறது. அவ்வப்போது தன் உடல் நிலை பாதிப்புகளால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் கருணாநிதி. கடந்த 18-ம் தேதி கருணாநிதிக்குத் தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள ட்ரக்கியோஸ்டோமி கருவியை மாற்றுவதற்காக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாலும், நுரையீரலில் சளி அதிகம் இருந்ததாலும் அவருக்குத் தொண்டைக்குழி (ஸ்ட்ரக்கியோஸ்டோமி) அறுவை சிகிச்சை அப்போது மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் தொடர் சிகிச்சை பெற்றுத் திரும்பினார்.

இந்நிலையில், அவருக்கு இருக்கும் சிறுநீரகத் தொற்று நோயால் ஏற்பட்ட காய்ச்சலின் காரணமாக நேற்று உடல்நிலை மிகவும் மோசமானதாகத் தகவல்கள் வெளியாகின. அவர் வீட்டிலேயே இரண்டு மருத்துவர்கள் தங்கி சிகிச்சையளித்து வருகின்றனர். கருணாநிதியின் உடல்நிலை பற்றிய  தகவல் தெரிந்ததும் தமிழக அரசியல் தலைவர்கள் பலர் நேற்று கோபாலபுரம் இல்லத்துக்கு நேரில் வந்து கருணாநிதியின் உடல்நலம்பற்றி விசாரித்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் அப்பகுதியில் தொண்டர்களும் பெருமளவில் கூடத்தொடங்கினர். இதனால் யாரும் உள்ளே வரமுடியாதபடி  பேரிகார்டுகள் வைத்து அடைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இன்று காலை கருணாநிதியின் உடல்நலனை பரிசோதிக்க காவேரி மருத்துவமனையில் இருந்து மேலும் நான்கு மருத்துவர்கள் கொண்ட குழு கோபாலபுரம் வந்துள்ளனர். அவர்களின் சோதனைக்குப் பிறகு கருணாநிதியின் உடல் நிலை பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோபாலபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் தொடர்ந்து பொதுமக்களும்,தொண்டர்களும் கூடி வருகின்றனர் . இதனால் அப்பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினும் இன்று காலை கோபாலபுரம் இல்லத்துக்கு வந்துள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனும் கருணாநிதியைச் சந்திக்க அவரது இல்லத்துக்கு வந்துள்ளார். தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் இன்றும் கோபாலபுரம் வந்துகொண்டிருக்கின்றனர்.