தூத்துக்குடி கலவரம்! - ஒருவருக்கு குண்டாஸ்; ஒருவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது! | Thoothukudi riots; Lawyer arrested under National Security Act

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (27/07/2018)

கடைசி தொடர்பு:12:35 (27/07/2018)

தூத்துக்குடி கலவரம்! - ஒருவருக்கு குண்டாஸ்; ஒருவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது!

தூத்துக்குடியில் வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேரை ஏற்கெனவே தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது  மக்கள் அதிகாரம் அமைப்பின் தூத்துக்குடி  ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் அரி ராகவன் என்பவரும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி கலவரம்

தூத்துக்குடியில் கடந்த மே 22-ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மக்கள், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட பேரணியாகச் சென்றனர். இதில் போலீஸாருக்கும் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளு முள்ளு கலவரமாக மாறியது. இதில், கல்வீச்சு, வாகனங்கள் எரிப்பு ஆகியவை நடந்தது. கலவரத்தை ஒடுக்க நடந்த தடிஅடி, துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் பலத்த மற்றும் லேசான காயமடைந்தனர். 

துப்பாக்கிச் சூடு நடந்த மூன்று நாள்கள் வரை மாவட்டத்தில் பல பகுதிகளில் கல் வீச்சு, பேருந்து எரிப்பு ஆகியவையும் நடந்தன. இந்நிலையில், விசாரணை என்ற பெயரில் தெருக்களில், வீடுகளில் புகுந்து 300-க்கும் மேற்பட்ட ஆண்களை போலீஸார் கைது செய்தனர். இதில் பலரை விடுவித்தும் சிலரை விடுவிக்காமலும்  போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இக்கலவரத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக, மக்கள் அதிகாரம் அமைப்பினைச் சேர்ந்த நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த சுனில் ரகுமான், முகமது இஸ்மாயில், முகமது யூனுப், தேனீ மாவட்டத்தைச் சேர்ந்த சோட்டையன், கோவில்பட்டியைச் சேர்ந்த சரவணன், வேல்முருகன் ஆகிய 6 பேர், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மக்கள் அதிகாரம் அமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்த வழக்கறிஞர் அரிராகவன் என்பவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழும், கிராமங்களில்  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைப்பு செய்து, கலவரத்தைத் தூண்டியதாகவும் தெற்கு வீரபாண்டியாபுரத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் உத்தரவின் பேரில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க