`ஒரு ரூபாய்க்கு டீ, காபி குடிக்கலாம்!' - கலாமை கொண்டாடும் தள்ளுவண்டிக் கடைக்காரர் | Trolley shopkeeper celebrates abdulkalam memorial day

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (27/07/2018)

கடைசி தொடர்பு:18:55 (27/07/2018)

`ஒரு ரூபாய்க்கு டீ, காபி குடிக்கலாம்!' - கலாமை கொண்டாடும் தள்ளுவண்டிக் கடைக்காரர்

திருவான்மியூர் அருகே கலாம் நினைவுநாளை முன்னிட்டு ஒரு ரூபாய்க்கு டீ, காபி விற்று அசத்தி வருகிறார் தள்ளுவண்டி கடைக்காரர் ஸ்டாலின்.

Photo Credits: facebook.com/Pon.Sudha

திருவான்மியூரில் இருந்து மகாபலிபுரம் செல்லும் வழியில் நீலாங்கரைக்கு முந்தைய நிறுத்தமான ஐஸ் பேக்டரி என்று அழைக்கப்படும் இடத்தில் உள்ள அம்முலு அம்மாள் தேநீர் கடையில் நேற்று ஒரு வித்தியாசமான அறிவிப்பு கண்ணில் பட்டது. அதாவது,  ``கலாமின் முகம் பதிந்த பெரிய ஃபிளெக்ஸில், `அப்துல் கலாமின் நினைவுநாளை முன்னிட்டு இன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை டீ, காபி ஒரு ரூபாய் விலையில் விற்கப்படும்' என்ற அறிவிப்புதான் அது. இந்த வித்தியாசமான அறிவிப்பைப் பார்த்து அதை அறிந்துகொள்ள அந்த `அமுல் அம்மா' தேநீர் கடைக்குச் சென்றோம். அங்கு, ஒரு சுறுசுறுப்பான இளைஞர் மற்றும் ஒரு பெண்ணும் பரபரப்பாய் இருந்தார்கள். ஒரு வண்டி, ஒரு மரநிழலில் சிறு பந்தல். ஃபிளெக்ஸ் கூரை. இதுதான் கடை. பக்கத்து சாஃப்ட்வேர் நிறுவனத்தின் இளைஞர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதே கடையில்தான் காதல் தினத்தில் ஜோடியாக தேநீர் அருந்துபவர்களுக்கு இலவசம் என்று அறிவித்திருந்தார்கள். இப்போது இப்படி ஒரு அறிவிப்பு. இந்த அறிவிப்பு குறித்து அந்த இளைஞர் பேசியது, ``என் பெயர் ஸ்டாலின். தஞ்சைதான் என் சொந்த ஊர். ஏழாவது வரை படித்துள்ளேன். ஹாட் சிப்ஸ் கடையில் டீ மாஸ்டராக இருந்தேன். பின்னர் அங்கிருந்து நின்ற பிறகு 3 ஆண்டுகளாக இந்தக் கடையை நடத்திட்டு வர்றேன். 

என் மனைவி தனலட்சுமி கடையை நடத்துவதில் எனக்கு உதவியாக இருக்கிறார். எங்களுக்கு இரண்டு குழந்தைகள். ஆனாலும் நாங்கள் இன்னும் காதலர்கள்தான். அதனால்தான் காதலர் தினத்தில் காதலைக் கொண்டாடுகிறோம்" என்றவரிடம் அப்துல் கலாம் குறித்து கேட்டதற்கு, ‘அவரை ரொம்பப் பிடிக்கும் சார். சாதாரண குடும்பத்தில் பிறந்து குடியரசுத் தலைவர் ஆனவர். ராக்கெட் விட்ட விஞ்ஞானி' என்று அவரது புரிதலை வெளிப்படுத்தினார்.

தள்ளுவண்டி கடை

Photo Credits: facebook.com/Pon.Sudha

இரண்டாவது வருடமாக அவரின் நினைவுநாளை இப்படிக் கொண்டாடுகிறேன். இதற்காக சென்ற ஆண்டு 5,000 ரூபாய் செலவாகியது. இந்த முறை இன்னும் சிறப்பா கொண்டாடணும். அதற்குதான் அந்த ஃபிளெக்ஸ் அறிவிப்பு. வழக்கமா 12 லிட்டர் பால் செலவாகும். ஆனால் அப்துல்கலாம் நினைவுநாளைக் கொண்டாட 35 லிட்டர் பாலுக்கு சொல்லி இருக்கேன்" என்றவர் கலாம் படத்துக்கு பூ அலங்காரம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்.

தள்ளுவண்டி கடைக்காரர் ஸ்டாலின்முன்னதாக அவரிடம், `ஏன் மதியம் 1 மணி வரை' எனக் குறிப்பிட்டிருப்பதைப் பற்றிய கேள்வியை கேட்க, ‘நானும் மனைவியும் மட்டும்தான் வரும் கூட்டத்தை சமாளிக்கணும். உதவிக்கு வேற ஆள் இல்லை. அது மட்டுமில்லாமல் இதைக் கேள்விப்படுறவங்க எப்ப வேண்டுமானாலும் போகலாம்னு நினைக்காம, 1 மணிக்குள்ள போகணும்னு முயற்சி செய்வாங்க, அதுக்காகதான்" என விளக்கினார்.

சில நடிகர்களின் ரசிகர்கள் இவரிடம் `தலைவர் பிறந்த நாளைக்கும் இதேபோல செய்யுங்க, செலவை நாங்க பார்த்துக்கிறோம்' என்று பலமுறை கேட்டும் மறுத்து விட்டிருக்கிறார் ஸ்டாலின். வருமானத்தில் மட்டுமே கவனம் குவிக்கும் பெரும் வியாபாரிகளுக்கு மத்தியில் சிறிய வணிகத்திலும் தன்னால் இயன்றதை வாடிக்கையாளர்களுக்குச் செய்யும் அந்த மனதை நிச்சயம் வாழ்த்த வேண்டும். நாம் கிளம்பும் நேரத்தில் அங்கிருக்கும் வாடிக்கையாளர்களிடம் ``நாளைக்கு குடும்பத்தோட வாங்க'' என்று வேண்டுகோள் வைத்துக் கொண்டிருந்தார் ஸ்டாலின்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க