வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (27/07/2018)

கடைசி தொடர்பு:12:10 (27/07/2018)

கருணாநிதி நூற்றாண்டு விழா காண வேண்டும்! ராமதாஸ் உருக்கம் #Karunanidhi

தி.மு.க தலைவர் கருணாநிதி முழுமையான உடல் நலம் பெறுவார் என்றும் அவர் நூற்றாண்டு விழா காண வேண்டும் என்றும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உருக்கமாக கூறியுள்ளார்.

கருணாநிதி

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தி.மு.க தலைவரும், எனது ஆருயிர் நண்பருமான கருணாநிதியின் உடல்நிலை, வயது முதுமை காரணமாக சற்று நலிவடைந்திருப்பதாகவும், சிறுநீரகக் குழாயில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக கருணாநிதிக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன.

தமிழக அரசியலில் முறியடிக்க முடியாத பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர் கருணாநிதி ஆவார்.  தி.மு.க-வின் தலைவராக கருணாநிதி பதவியேற்றதன் 50-வது ஆண்டு தொடங்கிய நிலையில்,  அவரது உடல்நிலை பாதிப்பு குறித்த தகவலும் வந்திருப்பது நம்மை பாதித்திருக்கிறது. கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்ட பிறகு அவரை காவேரி மருத்துவமனையிலும், கோபாலபுரம் இல்லத்திலும் நேரில் சென்று சந்தித்தேன். கோபாலபுரம் இல்லத்தில் என்னை கருணாநிதி மிகச்சரியாக அடையாளம் கண்டுகொண்டார். அதனால் அவர் மிக விரைவில் உடல் நலம் தேறி மீண்டும் மக்கள் பணியாற்ற வருவார் என நானும் மற்றவர்களும் எதிர்பார்த்திருந்தோம். ஆனால், அதற்கு மாறாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், காய்ச்சலில் அவதிப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறியிருப்பது வருத்தமளிக்கிறது.

கருணாநிதிக்கு அவரது இல்லத்திலேயே தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் முழுமையான உடல் நலம் பெறுவார் என்று நம்புகிறேன். அவர் நூற்றாண்டு விழா காண வேண்டும்; மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற எனது விருப்பங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க