115 ரூபாய்க்காக அவமானத்தைச் சந்தித்த பெண் போலீஸ் நந்தினி! - நடந்ததை விவரிக்கும் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்

 பெண் போலீஸ் ஏட்டு நந்தினி

சென்னை, சேத்துப்பட்டு பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 25-ம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் திருடிய பெண் போலீஸ் ஏட்டு நந்தினி மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் பிரணவ்வை தாக்கிய போலீஸ் ஏட்டு நந்தினியின் கணவர் தினேஷை போலீஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தன்று என்ன நடந்தது என்று சூப்பர் மார்க்கெட்டை நடத்திவரும் பிரணவ்வின் சகோதரர் விஜய்யின் மனைவி சுதாவிடம் பேசினோம். 

``கடந்த 25-ம் தேதி போலீஸ் சீருடையில் நந்தினி என்பவர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் வந்தார். அப்போது பாதிக்கு மேற்பட்ட ஊழியர்கள் மதிய உணவுக்காகச் சென்றிருந்தனர். போனில் பேசியபடி நந்தனி, நீண்ட நேரம் பொருள்களை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தார். எங்களின் சூப்பர் மார்க்கெட்டுக்குள் 15 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. கீழ் தளத்தில் அலுவலகம் உள்ளது. அங்கிருந்தபடியே சிசிடிவி கேமராவை கண்காணித்த ஊழியர்கள், நந்தினி, பொருள்களைத் திருடுவதைப் பார்த்தனர். உடனடியாக பில்லிங் கவுன்டரில் இருந்தவருக்கு போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

பில் போடும்போது, நந்தினி, திருடிய பொருள்களைக் கொடுக்கவில்லை. அப்போதுதான் சிசிடிவி கேமரா காட்சிகளை அவரிடம் காண்பித்தோம். உடனே நந்தினி, பில் போட்ட பெண்ணிடம் தகராறு செய்தார். அதன்பிறகு நந்தினியை பெண் ஊழியர் ஒருவர் செக்அப் செய்தார். அப்போது, 115 ரூபாய் மதிப்பிலான பொருள்களை அவர் திருடி பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்தது தெரியவந்தது. அதை எங்களிடம் கொடுத்துவிட்டு, `இனிமேல் இப்படி நடந்துகொள்ள மாட்டேன்' என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார். அப்போது அவரின் அடையாள அட்டையை அவர்தானா என்பதை உறுதிப்படுத்த வாங்கி வைத்திருந்தோம். கேன்டின் அட்டையைத்தான் நந்தினி கொடுத்தார். 

நந்தினியின் செயலை வெளியில் சொன்னால் ஓட்டுமொத்த போலீஸாருக்கும் கெட்டப்பெயர் ஏற்படும் என்று கருதி அந்தச் சம்பவத்தை அப்படியே விட்டுவிட்டோம். சில மணி நேரத்துக்குப்பிறகு மூன்று பேர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து தகராறு செய்தனர். என் மனைவியிடம் (நந்தினி) நீங்கள் அப்படி நடக்கலாமா என்று கேட்டுக்கொண்டே பில்லிங் கவுன்டரிலிருந்த பிரியங்கா என்ற இளம்பெண்ணின் கன்னத்தில் அடிக்க முயன்றனர். அங்கிருந்து அவர் சத்தம் போட்டுக்கொண்டே ஓடிவிட்டார். அப்போது அவரின் தலை சுவரில் மோதி காயம் ஏற்பட்டது. 

 பெண் போலீஸ் ஏட்டு நந்தினி

அதைப்பார்த்த ஊழியர்கள் தட்டிக்கேட்டனர். அவர்களை நந்தினியின் உறவினர்கள் தாக்கினர். அதை தடுக்கச் சென்ற பிரணவ்வை சரமாரியாக அடித்து உதைத்தனர். அதில் அவரின் தாடை உடைந்து ரத்தம் கொட்டியது. அதன்பிறகுதான் போலீஸில் புகார் கொடுத்தோம். நந்தினி எங்களிடம் தவறான முகவரியைத்தான் கொடுத்திருந்தார். தற்போது, நந்தினி மீதும் அவரின் கணவர் தினேஷ் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என்றார். 

சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கும் பிரியங்கா என்ற இளம்பெண் பெற்றோரை இழந்தவர். விடுதியில் தங்கியிருந்து படித்துக்கொண்டே இந்த வேலையைச் செய்கிறார். அவரும் இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ளார். பொருள்களைத் திருடிய போலீஸ் ஏட்டு நந்தினிக்கு ஏற்பட்ட அவமானத்தால்தான் சூப்பர் மார்க்கெட் ஊழியர்களை தினேஷ் தாக்கியுள்ளார். அங்குள்ள சிசிடிவி கேமராவில் 4 மணி நேரம் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளதாம். மேலும், அடிக்கடி இந்த சூப்பர் மார்க்கெட்டுக்குள் நந்தினி வந்துள்ளதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். 

போலீஸார் கூறுகையில்,``சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் பிரணவ் கொடுத்த புகாரின் பேரில் நந்தினியின் கணவர் தினேஷை கைது செய்துள்ளோம். அவருடன் வந்த இரண்டு பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடி வருகிறோம். நந்தினியிடமும் விளக்கம் கேட்டுள்ளோம். அதன்அடிப்படையில் அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். 

நந்தினி திருடிய நான்கு பொருள்கள் 

55 ரூபாய் மதிப்புள்ள ஓடாமாஸ், 30 ரூபாய் மதிப்புள்ள ஃபைவ் ஸ்டார், 10 ரூபாய் மதிப்புள்ள ஜெம்ஸ், 20 ரூபாய் மதிப்புள்ள பார் ஒன்  என மொத்தம் 115 ரூபாய் மதிப்புள்ள நான்கு பொருள்களை போலீஸ் ஏட்டு நந்தினி திருடியதாக சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!