' யாரையும் பார்க்கவில்லை; கையை அசைக்கவில்லை!'  - கருணாநிதியின் ஹெல்த் ரிப்போர்ட் #Karunanidhi | Informations about Dmk chief Karunanidhi's Health condition

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (27/07/2018)

கடைசி தொடர்பு:18:04 (27/07/2018)

' யாரையும் பார்க்கவில்லை; கையை அசைக்கவில்லை!'  - கருணாநிதியின் ஹெல்த் ரிப்போர்ட் #Karunanidhi

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏராளமான மருந்துகளை உட்கொண்டுவிட்டார் கருணாநிதி. அந்த மருந்துகளால்தான், அவரது உடல் உறுப்புகள் இயங்கிக் கொண்டிருக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

' யாரையும் பார்க்கவில்லை; கையை அசைக்கவில்லை!'  - கருணாநிதியின் ஹெல்த் ரிப்போர்ட் #Karunanidhi

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து வரும் தகவல்கள், உடன்பிறப்புகளை நிலைகுலைய வைத்திருக்கிறது. ' மருத்துவக் குழுவின் கவனிப்பால், இதயத் துடிப்பு சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது. அவரது உடல்நிலையில் ஏற்ற இறக்கமான சூழல்களே நிலவி வருகின்றன' என்கின்றனர் கோபாலபுரம் வட்டாரத்தில். 

தமிழக அரசியலில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒதுங்கியிருக்கிறார் கருணாநிதி. ஒரே காரணம், வயது முதிர்வு மற்றும் மீசெல்ஸ் பாதிப்பு. இதன் அடுத்தகட்டமாக சுவாசிப்பதிலும் சிக்கல் ஏற்படவே, காவேரி மருத்துவமனையில் ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை எடுத்துக் கொண்டார். தொண்டையில் பொருத்தப்பட்ட குழாய் வாயிலாக சுவாசித்து வருகிறார். இதுவரையில் மூன்று முறை இந்தக் குழாய்கள் மாற்றப்பட்டுவிட்டன. அவரது உடல்நிலையைக் காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு தீவிரமாகக் கண்காணித்து வந்தது. இந்நிலையில், கடந்த 18-ம் தேதி ட்ரக்கியாஸ்டமி செய்யப்பட்ட பழைய குழாயை நீக்கிவிட்டு, நான்காவது முறையாக புதிய குழாய் பொருத்தப்பட்டது. மருத்துவமனையில் இருந்து அழைத்துச் செல்லப்படும்போதே, அவரது உடல்நிலையில் நிலவும் மாற்றங்கள் குறித்து மருத்துவர்கள் விரிவாக எடுத்துரைத்துள்ளனர். இதன்பின்னர், சிறுநீரகப் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக காய்ச்சல் பாதிப்புக்கும் அவர் ஆளானதாகத் தகவல் வெளியானது. நேற்று முன்தினம் கருணாநிதியின் உடல்நிலையை நேரில் கவனித்த செயல் தலைவர் ஸ்டாலின், கண்கள் கலங்கி அழுதிருக்கிறார். இதனால் அவரின் கண்கள் மிகவும் சிவந்து இருந்ததன் காரணமாக, மாணவர்களுக்குப் பரிசு வழங்குவது தொடர்பான நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. இதற்கிடையில், நேற்று மாலையில் இருந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவியதால், கோபாலபுரத்தை நோக்கித் தொண்டர்கள் படையெடுக்கத் தொடங்கினர். துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரது வருகையும் உடன்பிறப்புகளைக் கவலையில் ஆழ்த்தியது. 

கருணாநிதி உடல்நிலை

" இரண்டு வார காலமாக கருணாநிதியை யாரும் வெளியில் கூட்டிச்  செல்லவில்லை. கடந்த 18-ம் தேதி காவேரி மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லும்போது வெளி உலகைப் பார்த்தார். இதனால் அவர் கடும் மனஉளைச்சலில் இருந்ததாகத் தகவல் வந்தது. தற்போது உடல் நலிவுற்ற நிலையில், அவரை ஏன் மருத்துமனைக்குக் கொண்டு செல்லவில்லை என்ற கேள்வியை சிலர் எழுப்பினர். வீட்டிலேயே அனைவரும் வந்து பார்ப்பதால்தான், தேவையற்ற வதந்திகள் வெளிவருகிறது. அவரது மகள் செல்வி, சென்னையில்தான் இருக்கிறார். ஆனால், அமெரிக்காவில் இருந்து வந்து கொண்டிருப்பதாக வதந்தி பரவுகிறது. நேற்று இரவு 7.30 மணியளவில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் டெல்லிக்குச் சென்றார் கனிமொழி. நாடாளுமன்றப் பணிகளுக்காகத்தான் அவர் டெல்லிக்குச் சென்றார். இதையே சர்ச்சையாக்கிவிட்டனர். இப்போது சென்னைக்கு அவர் திரும்பிக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதா அப்போலோவில் இருந்தபோது தி.மு.க நிர்வாகிகள் அவரைச் சந்திக்கச் சென்றனர். அதேபோல், காவேரி மருத்துவமனையில் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க வந்தார் தம்பிதுரை. அதேபோல்தான், நேற்று உடல்நலிவு எனக் கேட்டதும் விசாரிப்பதற்காக வந்திருந்தார் ஓ.பன்னீர்செல்வம். அது தேவையற்ற விவாதங்களை உருவாக்கிவிட்டது. கருணாநிதியை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லலாமா...வேண்டாமா என்பதில் குடும்ப உறவுகளுக்குள் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டுள்ளன" என்கிறார் தி.மு.க நிர்வாகி ஒருவர். 

கருணாநிதி உடல்நிலை

' எப்படி இருக்கிறார் கருணாநிதி?' என்ற கேள்வியை மருத்துவர்கள் வட்டாரத்தில் முன்வைத்தோம். " அவரை ஏன் மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லவில்லை எனச் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அந்த ஸ்டேஜ் எல்லாம் தாண்டிவிட்டது. தவிர, மருத்துவமனையில் பிற நோயாளிகள் இருப்பதால், நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் கோபாலபுரம் வீட்டில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது இதயத் துடிப்பு மட்டும் சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது. நேற்று அவர் யாரையும் பார்க்கவில்லை. கையை அசைக்கவில்லை. தொடக்கத்தில் அவரைப் பாதித்த மீசெல்ஸ் நோய்க்காக மருந்துகளை உட்கொண்டார். இதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏராளமான மருந்துகளை உட்கொண்டுவிட்டார் கருணாநிதி. அந்த மருந்துகளால்தான், அவரது உடல் உறுப்புகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. நுரையீரலும் கிட்னியும் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில நாள்களாக அவருக்கு குளுக்கோஸ் மட்டுமே செலுத்தப்பட்டு வந்தது. நேற்று இரவு அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது. உடலில் செலுத்தப்பட்ட குளுக்கோஸ் வெளியில் வந்துவிட்டதுதான் காரணம். ஸ்டாலினும் மு.க.தமிழரசு மட்டுமே தற்போது உடன் இருக்கின்றனர். வேறு யாரும் அந்த அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. மிகச் சிறிதான அந்த அறையில் பத்து பேருக்கும் மேல் நிற்க முடியாது. காவேரி மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்போடு, தற்போது புதிதாக நான்கு மருத்துவர்கள் அடங்கிய குழுவும் கோபாலபுரம் வந்துள்ளது. 48 மணி நேரத்துக்குள் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறோம்" என்றார் விரிவாக. 

பிரதமர் நரேந்திர மோடி இன்று பதிவிட்டுள்ள ட்வீட்டில், ' மு.க.ஸ்டாலினிடமும் கனிமொழியிடமும் பேசினேன். எந்த உதவி வேண்டும் என்றாலும் செய்வதற்குத் தயாராக இருக்கிறேன். கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டும்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். வைகோ, தமிழிசை, தா.பாண்டியன் என தொடர்ந்து, கோபாலபுரத்துக்கு வருகை தரும் அரசியல் தலைவர்களால் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளனர் உடன்பிறப்புகள். ' விரைவில் நலம் பெறுவார் கருணாநிதி' என உடன்பிறப்புகளுக்கு நம்பிக்கையோடு பதில் அளித்து வருகின்றனர் அறிவாலய நிர்வாகிகள்.


[X] Close

[X] Close