`எனக்குத் திருமணம் நடத்திவைத்தவர் கருணாநிதி'- கோபாலபுரம் இல்லத்தில் தமிழிசை உருக்கம் #Karunanidhi

``கருணாநிதி பூரண உடல்நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்'' என கோபாலபுரம் சென்ற தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி

தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த இரண்டு வருடங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அரசியலிலிருந்து விலகி ஓய்வுபெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று முதல் அவரின் உடல்நிலை மிகவும் மோசமானதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபாலபுரத்துக்கே மருத்துவர்கள் வந்து சிகிச்சையளித்து வருகின்றனர். கருணாநிதியின் உடல்நிலை குறித்த தகவல் அறிந்த தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் நேற்று மாலை முதல் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு வரத்தொடங்கிவிட்டனர். நேற்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வர், அமைச்சர் ஜெயக்குமார் போன்ற பலர் வந்திருந்தனர். அவர்களைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேற்று இரவே நேரில் வந்து கருணாநிதியின் நலம் விசாரித்துச் சென்றனர். 

இன்று காலையிலும் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் கோபாலபுரத்துக்கு வந்துகொண்டே உள்ளனர். அதன்படி, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், ராதாரவி, வைரமுத்து உள்ளிட்ட பலரும் வந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், தி.மு.க தலைவரின்  உடல்நலம் குறித்து விசாரித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், ``தி.மு.க தலைவர் கருணாநிதி விரைவில் பூரண குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். எனக்குத் திருமணம் செய்துவைத்தவர் கருணாநிதி. அவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுகிறேன்” என உருக்கமாகக் கூறினார்.

அவரைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, ``கருணாநிதியின் உடல்நிலை பற்றி ஸ்டாலின் கூறினார். அவர் முழுமையாக நலம் பெற்று தன் காந்தக் குரலாலும், வசீகரிக்கும் பார்வையாலும் மீண்டும் மக்களைச் சந்தித்து தன் அரசியல் வேலைகளைச் செய்ய வேண்டும். அதற்கு இயற்கை அன்னை சிறந்த வழியை ஏற்படுத்தி தருவாள் என நம்புகிறேன்” எனக் கூறினார்.  

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் பேசுகையில், ``கருணாநிதி தமிழ் உள்ளவரை வாழ்வார். அவர் ஒன்றும் உயிருக்காக மன்றாடவில்லை. இயற்கை அவரை அழைத்துச் செல்ல போராடிக்கொண்டிருக்கிறது. அவர் உள்ள உறுதி இயற்கைக்கும் சவால்விட்டு அதைத் தடுத்து நிறுத்தி இருக்கிறது. தமிழக மக்கள் அனைவரும் மிகுந்த கவலையோடு எதிர்பார்த்தாலும் இப்போது துக்கச் செய்தி எதுவும் நிகழாது. அவர் அனைவரது நெஞ்சங்களிலும் நீடூழி வாழ்வார்” எனப் பேசியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!