'உங்க கனவுக்கு பணம் ஒரு தடையா!' திருட்டு நகை சர்ச்சையில் தனியார் நிறுவனம்

இவர்கள் கொள்ளையடிக்கும் நகைகளை ராஜா தன் மனைவி மூலம் நாமக்கல்லில் இருக்கும் `அட்டிகா' நிறுவனத்துக்குச் சொந்தமான கடையில் விற்றுள்ளார். இதுவரை, கொள்ளையடித்த நகைகளில் 100 பவுனுக்கும் மேல் அந்தக் கடையில் விற்றுள்ளார். அதற்கான ரசீதுகளையும் போலீஸாரிடம் காட்டியுள்ளார் என்று கண்டறியப்பட்டது. இந்தத் தகவலைக் கேட்டதும் போலீஸாரே அதிர்ந்து போயுள்ளனர்.

'உங்க கனவுக்கு பணம் ஒரு தடையா!' திருட்டு நகை சர்ச்சையில் தனியார் நிறுவனம்

``உங்க கனவுக்குப் பணம் ஒரு தடையாக இருக்கலாமா?... `அட்டிகா கோல்டு' நிறுவனத்துக்கு வாங்க, உங்கள் தங்க நகைகளுக்கு ஒரே நிமிடத்தில் கையில் பணம்" எனத் தொலைக்காட்சி விளம்பரங்களில் பிரபல நடிகை சொல்லும் வார்த்தைகள் இவை. அந்தப் பிரபல நகைக் கடைதான், இப்போது 100 பவுன் திருட்டு நகைகளை வாங்கி சர்ச்சையில் சிக்கியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்துள்ள வாழவந்தான்கோட்டை இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் தேவகுமாரி. இவர் ஜூலை 4-ம் தேதி அய்யம்பட்டி சாலையில் நடந்து சென்றபோது, மர்ம நபர்கள் மூன்றுபேர் அவருடைய கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவர் அணிந்திருந்த 10 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். தேவகுமாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த திருவெறும்பூர் போலீஸார், வாழவந்தான் கோட்டை அகதிகள் முகாமில் உள்ள சிவகுரு மற்றும் விக்னேஷ் ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தேவகுமாரியிடம் கைவரிசை காட்டிய கும்பலுக்கும் நாமக்கல் அகதிகள் முகாமைச் சேர்ந்த ராஜா என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் ராஜா, கெட்டியான், பாண்டி எனும் வெவ்வேறு பெயர்களில் பல இடங்களில் நகைக் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. 

திருட்டு நகையை விற்ற ராஜா -அனு

ராஜாவும், அவரது மனைவி அனுவும் சேர்ந்து, குறிப்பிட்ட ஏரியாவில் வாடகைக்கு வீடு கேட்பது போன்று சென்று, அந்தப் பகுதியில் பூட்டிக் கிடக்கும் வீடுகளை நோட்டமிடுவார்களாம். ஆள் அரவம் இல்லாத நேரங்களில், வீடுகளில் உள்ளவர்களை மிரட்டி பயணம், நகைகளைக் கொள்ளையடிப்பதில் அவர்கள் கில்லாடி என்பது தெரியவந்தது. 

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மனைவி அனுவுடன் தலைமறைவாக இருந்த ராஜா, இலங்கைக்குத் தப்பிச் செல்ல இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 2004-ம் ஆண்டு முதல் இருசக்கர வாகனங்களைத் திருடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததால், ராஜா மீது நாமக்கல் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அதனடிப்படையில், போலீஸார்  ராஜாவைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்தபோதுதான், விக்னேஷ் மற்றும் சிவகுருவுக்கும் ராஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறையிலிருந்து வெளிவந்த பின்னர், அவர்கள் இரு சக்கர வாகனத் திருட்டை விட்டுவிட்டு, வீடுகளில் கைவரிசை காட்டத் தொடங்கியுள்ளனர். அப்படி இவர்கள் கொள்ளையடிக்கும் நகைகளை ராஜா தன் மனைவி மூலம் நாமக்கல்லில் இருக்கும் `அட்டிகா' நிறுவனத்துக்குச் சொந்தமான கடையில் விற்றுள்ளார். இதுவரை, கொள்ளையடித்த நகைகளில் 100 பவுனுக்கும் மேல் அந்தக் கடையில் விற்றுள்ளார். அதற்கான ரசீதுகளையும் போலீஸாரிடம் காட்டியுள்ளார் என்று கண்டறியப்பட்டது. இந்தத் தகவலைக் கேட்டதும் போலீஸாரே அதிர்ந்து போயுள்ளனர்.

இன்ஸ்பெக்டர் மதன்

உடனே, இன்ஸ்பெக்டர் மதன் தலைமையிலான போலீஸார், நாமக்கல்லுக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது நகைக் கடை நிர்வாகத்தினர், ``தாங்கள் வாங்கிய நகைகளைத் திருப்பிக் கொடுக்க முடியாது" எனச் சொல்லியுள்ளனர். இதையடுத்து போலீஸார், அந்த நகைக் கடையின் மேலாளர் முருகேசன், கடை நிர்வாகி சக்திவேல் ஆகியோரை அழைத்துவந்து விசாரணை நடத்தியதுடன், இருவர் மீதும் திருட்டு நகைகளை வாங்கியதற்காக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருவரையும் கைதுசெய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் நகைக்கடை உரிமையாளரான பெங்களூருவைச் சேர்ந்த பொம்மனஹல்லி பாபு மற்றும் அந்நிறுவனத்தின் தமிழகப் பொறுப்பாளர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட நகைக்கடை நிர்வாகம் சார்பில் இன்ஸ்பெக்டர் மதனுக்கு, தங்கள் நிறுவனத்துக்கு எதிராக அவதூறு பரப்புவதாகத் தெரிவித்து வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய இன்ஸ்பெக்டர் மதன், ``தேவகுமாரி என்ற பெண்ணிடம் நகையை வழிப்பறி செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போது, ராஜா மற்றும் அவரின் மனைவி அனு ஆகியோர் குறித்து தகவல் கிடைத்தது. அவர்கள் திருடிய நகைகளை, நாமக்கல்லில் உள்ள நகைக்கடையில் விற்றிருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, இலங்கைக்குத் தப்பிச் செல்ல முயன்ற ராஜாவையும், அவருடைய மனைவி அனுவையும் கைது செய்தோம். திருட்டு நகைகளை வாங்கிய நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம்.  இந்நிலையில் எனக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதைச் சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறோம்" என்றார்.

அடிகா முதலாளி பாபு

திருட்டு நகைகளை வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து, நாமக்கல்லைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட நிறுவனத்தாரிடம் பேசியபோது, ``இந்தப் பிரச்னையில் எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. வழக்கமாக நகைகளைக் கொண்டுவருபவர்களின் ஆதார் அட்டை உள்ளிட்ட சான்றுகளைப் பரிசோதித்த பிறகே, அவர்களுடைய நகைகளுக்கான பணத்தைத் திருப்பித் தருவோம். மற்றபடி அந்த நகைகள் எங்கிருந்து வந்தன, எப்படி வந்தன என்பது குறித்து நாங்கள் கண்காணிப்பதில்லை. இந்தப் பிரச்னையில் எங்கள் நிறுவனத்தின் மீதும், ஊழியர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருப்பதை சட்டப்படி சந்திப்போம். இதில் எங்கள் ஊழியர்களுக்குத் துளியும் சம்பந்தமில்லை" என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!