திருக்குவளைக்கு வருவார் கருணாநிதி! - தொகுதி மக்கள் நம்பிக்கை

தி.மு.க தலைவராக கருணாநிதி பொறுப்பேற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.  இதைக் கோலாகலமாகக் கொண்டாடவேண்டிய தி.மு.க-வினர், கருணாநிதியின் உடல்நிலை காரணமாக சோகமாகக் காணப்பட்டுவருகின்றனர். அவரின் சொந்த ஊரான திருக்குவளை மக்களும் வருத்தத்தோடு இருக்கின்றனர். `அவர், உடல் நலம்பெற்று மீண்டும் திரும்பிவருவார். அப்போது, பொன் விழா ஆண்டு பிரமாண்டமாகக் கொண்டாடப்படும்' என்கின்றனர்.

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்துவருகிறார். தொடர்ந்து மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்துவருகின்றது. நேற்றிரவு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் சென்று கருணாநிதியின் உடல்நலம்குறித்து விசாரித்துவந்தனர். இந்த நிலையில், பல்வேறு கட்சித் தலைவர்கள் கோபாலபுரத்துக்குச் சென்று கருணாநிதியின் உடல்நிலைகுறித்து ஸ்டாலினிடம் பேசிவந்தனர். இதற்கிடையே, சொத்துவரி உயர்த்தபட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எப்போதும் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களில் உரக்க குரல் கொடுத்து கோஷமிடும் தி.மு.க-வினர், சற்று சோர்வாகவே காணப்பட்டனர். அவர்கள், கருணாநிதியின் உடல்நிலைகுறித்து அதிக கவலையுடன் காணப்படுகிறார்கள்.

இதுகுறித்து தஞ்சாவூரில் தி.மு.க நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ``தலைவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு எங்களைப் பெரிய அளவில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதனால், அவர் தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக்கூட எங்களால் உற்சாகமாகக் கொண்டாட முடியவில்லை. சீக்கிரமே அவர் மீண்டு வருவார். அதன்பிறகு, இந்த பொன்விழா ஆண்டை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றனர்.

கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூர் தி.மு.க-வினரிடம் பேசினோம். ``தலைமை அறிவித்த ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததற்காக, இன்று ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தோம். பிரமாண்டமாகக் கொண்டாடப்படவேண்டிய இந்த நாளை சாதாரணமாகவே கொண்டாடினோம். திருவாரூர் மக்கள் மட்டுமல்லாமல், தலைவரின் சொந்த ஊரான திருக்குவளை மக்களும் வருத்தத்தோடு இருக்கிறார்கள். அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். மீண்டும் அவர் திருக்குவளைக்கு வருவார். அப்போது, இன்னும் பிரமாண்டமாக பொன்விழா ஆண்டைக் கொண்டாடுவோம் என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!