சார்பு ஆய்வாளரைக் கண்டித்து சாலையில் அமர்ந்த பெண்கள்! தமிழக - கேரள போக்குவரத்து முடக்கம்

தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள காபி, ஏலம், மிளகு தோட்டங்களுக்குச் செல்லும் பெண்களை இழிவாகப் பேசிய குமுளி சார்பு ஆய்வாளரைக் கண்டித்து, 500-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், தமிழகம் மற்றும் கேரளா இடையிலான போக்குவரத்து இரண்டு மணிநேரம் துண்டிக்கப்பட்டது.

பெண்கள் போராட்டம்

தினமும் காலையில், ஆயிரக்கணக்கான பெண்கள் தமிழகக் கேரள எல்லையில் அமைந்திருக்கும் தோட்டங்களுக்கு தனியார் ஜீப் மூலம் வேலைக்குச் செல்வது வழக்கம். தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்துவரும் பெண்கள், மதுரை − கொச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணிப்பர். நூற்றுக்கணக்கான ஜீப்களில் செல்லும்போது, குமுளி காவல்நிலைய செக்போஸ்ட்டில் ஒரு வாகனத்தை நிறுத்திய குமுளி சார்பு ஆய்வாளர் அல்போன்ஸ்ராஜா, ஜீப்பில் அமர்ந்திருந்த பெண்களை இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக ஜீப்களில் வந்த பெண்களும் மறியலில் ஈடுபட, போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.

பெண்கள் போராட்டம்

உடனே, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கூடலூர் காவல்துறையினர், சார்பு ஆய்வாளர்மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, பெண்களை சமாதானம் செய்து வேலைக்கு அனுப்பிவைத்தனர். எல்லைப் பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு வேலைக்கு வரும் பெண்கள், ஒரே ஜீப்பில்  20 பேர் வரை ஆபத்தான பயணம்செய்வது வாடிக்கை. அதேநேரம், இப்பெண்களை ஏற்றிவரும் சில வாகனங்களுக்கு முறையான அனுமதியும் இல்லை. இதனால், பல முறை விபத்தைச் சந்தித்திருக்கிறார்கள் இப்பெண்கள். இந்நிலையில், வாகனச் சோதனை செய்தபோதுதான், சார்பு ஆய்வாளர் பெண்களை இழிவாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!