ஆண்டிபட்டி அருகே கரடி தாக்கி இருவர் படுகாயம்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வண்டியூர் காட்டுப் பகுதியில், இன்று காலை இரண்டு கரடிகள் தாக்கியதில், இருவர் படுகாயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கரடி தாக்கியதில் காயம்

வண்டியூரைச் சேர்ந்த தங்கராஜ், தனக்குச் சொந்தமான தோட்டத்தில் இரவுக் காவலில் இருந்தார். இன்று அதிகாலை, காட்டுப்பகுதிக்குள் இருந்து தோட்டத்திற்குள் நுழைந்த கரடி ஒன்று, தங்கராஜை தாக்கியுள்ளது. அந்த நேரம், தனது ஆட்டுக்கு இலை தழைகளைப் பறிக்க தோட்டத்துக்குள் வந்த அதேபகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (வயது 70), கரடியால் தாக்கப்படும் தங்கராஜை மீட்க முயன்றுள்ளார். அப்போது, மறைந்திருந்த இன்னொரு கரடி, தங்கராஜைத் தாக்கியுள்ளது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுவந்து சேர்த்தனர்.

கரடி தாக்கியதில் காயம்

இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது தொடர்பாக, மேகமலை வன உயிரினக் காப்பாளர் கலாநிதியிடம் பேசியபோது, "இந்த கரடித் தாக்குதல் சம்பவம், இப்பகுதியில் இதுதான் முதல்முறை. பொதுவாக, இரவு நேரங்களில்தான் கரடி வெளியே வரும். இந்தச் சம்பவம்கூட அதிகாலையில்தான் நடந்திருக்கிறது. இது தொடர்பாக ஒரு குழு ஒன்றை அமைத்து, அப்பகுதியில் ஆய்வு செய்துவருகிறோம். எனவே, மக்கள் அச்சப்பட தேவையில்லை" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!