பேரறிவாளன் எழுப்பிய கேள்விகள்..! உள்துறை அமைச்சகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் கண்டனம்

'ஆயுள் தண்டனை பெற்றுள்ள கைதிகளுக்குத் தண்டனைக்குறைப்பு செய்து, முன்னதாகவே விடுவிப்பதற்கென்று விதிகள் ஏதும் இல்லை' என்று பேரறிவாளன் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய தகவல் ஆணையத்தில் பதிலளித்துள்ளது. 

பேரறிவாளன்

மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்றுவருபவர்களுக்கு, தண்டனைக் குறைப்பு செய்வதற்கான நடைமுறைகள் என்னென்ன? என்று மத்திய உள்துறை அமைச்சகத்தில் பேரறிவாளன் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் கேள்வி எழுப்பியிருந்தார். பேரறிவாளன் எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உரிய பதிலளிக்கவில்லை. அதையடுத்து, அவர் மத்திய தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. பேரறிவாளன் சிறையிலிருந்து காணொலி மூலம் மத்திய தகவல் ஆணையத்தின் விசாரணையில் பங்கேற்றார்.

மத்திய தகவல் ஆணைய விசாரணைகுறித்து தெரிவித்த பேரறிவாளனின் வழக்கறிஞர் பிரபு, "விசாரணையில் பேரறிவாளன், ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்னதாக விடுதலை செய்வதற்கான விதிமுறைகள் என்ன? இதுவரை எத்தனை பேர், தண்டனைக் காலத்துக்கு முன்னதாக விடுவிக்கப்பட்டுள்ளனர்? என்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த உள்துறை அமைச்சகம், 'கைதிகளை முன்னதாக விடுவிப்பதற்கு விதிமுறைகள் ஏதும் இல்லை. இதுவரை விடுவிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களைத் தெரிவிக்க முடியாது. அது, மற்றவர்களின் தகவல்' என்று விளக்கமளித்தது. உள்துறை அமைச்சகத்தின் இந்தப் பதிலுக்கு, மத்திய தகவல் ஆணையம் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து தெரிவித்த தகவல் ஆணையம், 'நீங்கள் (உள்துறை அமைச்சகம்) வழிமுறைகள் இல்லாமல் கைதிகளை விடுதலைசெய்வீர்கள். அதுகுறித்து எப்படி கேள்வி எழுப்பாமல் இருக்க முடியும்? விடுதலை செய்யப்பட்டவர்கள்குறித்த தகவல்களை அளிக்க வேண்டும்' என்று உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் ஆணையம் கண்டனம் தெரிவித்தது.

ஆயுள்தண்டனை பெற்ற கைதிகளை விடுவிப்பதற்கு விதிமுறைகள் ஏதேனும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, 'இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதுதொடர்பாக தற்போது ஏதும் தெரிவிக்க முடியாது' என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. நாடு முழுவதும் உள்ள கைதிகளை விடுதலைசெய்வதற்கு, இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது என்று காரணம் கூறுவீர்களா என்று உள்துறை அமைச்சகத்திடம் மத்திய தகவல் ஆணையம் கேள்வி எழுப்பியது. பிறகு, பேரறிவாளனுக்கு பதிலளித்த மத்திய தகவல் ஆணையம், 'உங்களது கேள்விகளுக்கு விரைவில் பதில் அளிக்கப்படும்' என்று தெரிவித்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!