வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (27/07/2018)

கடைசி தொடர்பு:19:20 (27/07/2018)

`போலீஸ் ஏ.சியை அட்ஜெஸ்ட் செய்யச் சொன்னார்கள்!’ - சர்ச்சையைக் கிளப்பிய கோவை ஸ்ருதி

ஸ்ருதி

‘கஸ்டடி எடுத்து விசாரிக்கும்போது, போலீஸார் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், சைபர் க்ரைம் பெண் இன்ஸ்பெக்டர் இருவர்கள் சேர்ந்துகொண்டு ஏ.சி-யை (உதவி கமிஷனரை) ‘அட்ஜஸ்ட்’ பண்ணச் சொல்லி நிர்பந்தப்படுத்தியதாகவும் திருமண மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்திருக்கும் நடிகை ஸ்ருதி பகீர் புகார் கூறியுள்ளார்.’ 

கோவை, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏழுக்கும் மேற்பட்ட ஐ.டி இளைஞர்களைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி அவர்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டிய புகாரில் சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்தோடு கைது செய்யப்பட்டவர் நடிகை ஸ்ருதி. வெளிவராத சில திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தன்னுடைய அம்மா சித்ராவின் உதவியோடு மேட்ரிமோனியல் வெப்சைட்களில் திருமண வரன் தேடுவதுபோல பதிவு செய்து, ஐ.டி இளைஞர்கள் பலரை திருமணம் செய்துகொள்கிறேன் என்று நாடகமாடி அவர்களிடம் பல கோடி ரூபாய்களைச் சுருட்டினார் என்பதுதான் புகார். இந்தப் புகாரில் கைதுசெய்யப்பட்ட ஸ்ருதி மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளிருந்து பிணையில் வெளிவந்த ஸ்ருதியும் அவரின் தாயார் சித்ராவும் கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். 

அப்போது பேசிய ஸ்ருதி, “நான் யாரையும் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றவில்லை. சுந்தர் என்பவர் என்னை ஒருதலையாகக் காதலித்தார். என்னையும் காதலிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார். நான் மறுத்துவிட்டேன், அந்தக் கோபத்தில் என்னைப் பழி வாங்குவதற்காகவே சுந்தரும் அவருடைய நண்பர்களான அமுதனும் சந்தோஷும் கூட்டுச் சேர்ந்து எங்கள் மீது பொய் புகார் கொடுத்துள்ளார்கள். அதற்கான எல்லா ஆதாரங்களும் எங்களிடம் இருக்கின்றன. ஆனால், எங்கள் தரப்பை யாரும் கேட்க மாட்டேன் என்கிறார்கள். இந்த வழக்கில் போலீஸ் என்னை கஸ்டடி எடுத்து விசாரித்தபோது அவர்களிடம் நான் அனைத்து உண்மைகளையும் ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டேன். 

ஆனால், அவர்கள் அதையெல்லாம் காதில் வாங்கவே இல்லை. என்னை விசாரித்த இரண்டு பெண் இன்ஸ்பெக்டர்கள் நீ எதுவும் சொல்ல வேண்டாம்மா! ‘ஏ.சி-யை அட்ஜஸ்ட் பண்ணா போதும்மா...’ உன்மேல ஒரு கேஸ்கூட இல்லாமல் ஆக்கிருவார்’னு பச்சையா பேசினாங்க. நான் மறுத்துட்டேன். உடனே கோபப்பட்டு என்னை பளார்... பளார்னு அடிச்சாங்க. அப்புறம், ஆடையை கழற்றி... என் உடம்புல ஒட்டுத் துணி இல்லாம போட்டோ பிடிச்சாங்க. ‘நீ... ஒப்புக்கலைன்னா ஃபேஸ்புக்ல போட்டு உன் வாழ்க்கையை நாசம் பண்ணிருவோம்னு’ மிரட்டினாங்க. என் உயிரே போனாலும் அது நடக்காதுனு நான் சொல்லிட்டேன். நீ என்ன பத்தினியான்னு கேட்டு என்னை குரூரமா சித்ரவதை செஞ்சாங்க. இதை வெளில சொன்னா நடக்குறதே வேற, உன்னை ரேப் பண்ணி கொன்னு ரோட்டுல தூக்கி வீசினால்கூட கேட்க யாரும் வரமாட்டாங்க’னு அந்த ஏ.சி-யே வந்து மிரட்டினார். விசாரணைங்கிற பேர்ல அவங்க செஞ்ச கொடுமைகளை என்னால சொல்ல முடியல. என்மேல எந்தத் தப்பும் இல்லை. எங்ககிட்ட எல்லா ஆதாரங்களும் இருக்கின்றன. போலீஸாரின் இந்த அத்துமீறல் குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்ய உள்ளோம்’’ என்றார்.