வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (27/07/2018)

கடைசி தொடர்பு:19:40 (27/07/2018)

3-ம் வகுப்பு மாணவியின் வாக்குமூலத்தால் சிக்கிய பெயின்டர் 

பெயின்டர் கணேசன்

சென்னையை அடுத்த அம்பத்தூரில், 3-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெயின்டர் கணேசன் என்பவரை போலீஸார் கைதுசெய்தனர்.

சென்னையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. அயனாவரத்தில், மாற்றுத்திறனாளி மாணவிக்கு கூட்டாக நடந்த பாலியல்தொல்லை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது, அம்பத்தூரில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக, அம்பத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தி கணேசன் என்பவரைக் கைதுசெய்துள்ளனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,``அம்பத்தூர் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி, அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்துவந்தார். அந்த மாணவிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் சாக்லேட் வாங்கிக் கொடுத்துள்ளார். கணேசனுக்கு 58 வயதாகிறது. இதனால், அவர் மீது யாருக்கும் சந்கேம் வரவில்லை. மேலும், மாணவி வீட்டில் பகலில் யாரும் இருப்பதில்லை. தனிமையில் இருந்த மாணவிக்கு கணேசன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். உடல்ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோதுதான், அவருக்கு பாலியல் தொல்லை நடந்த விவரம் மாணவியின் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது. அதன்பிறகே, மாணவியின் பெற்றோர் எங்களிடம் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் கணேசனிடம் விசாரித்து அவரைக் கைதுசெய்துள்ளோம். கணேசன், பெயின்டர் வேலை செய்துவருகிறார். அவர்மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம்" என்றனர். பாதிக்கப்பட்ட 3-ம் வகுப்பு மாணவியிடம் பெண் போலீஸார் விசாரித்தபோது, அவர் நடந்த சம்பவத்தை கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.