வெளியிடப்பட்ட நேரம்: 18:54 (27/07/2018)

கடைசி தொடர்பு:21:36 (27/07/2018)

தமிழகத்தில் 56 சதவிகித எம்.பி.ஏ பட்டதாரிகள் வளாகத் தேர்வில் தேர்வாகவில்லை! #MBA

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் நடத்திய ஓர் ஆய்வில் தமிழகத்தில் உள்ள எம்.பி.ஏ பட்டதாரிகளில் 56 சதவிகிதம் பேருக்கு வளாகத் தேர்வில் வேலை கிடைப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 56 சதவிகித எம்.பி.ஏ பட்டதாரிகள் வளாகத் தேர்வில் தேர்வாகவில்லை! #MBA

மிழகத்தில் அதிகளவில் வேலைவாய்ப்பை வழங்கிய எம்.பி.ஏ தற்போது அதில் சற்றே சுணக்கம் கண்டுள்ளது. தமிழக எம்.பி.ஏ பட்டதாரிகள் பலர், உரிய வேலையில்லாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் நடத்திய ஓர் ஆய்வில் `தமிழகத்தில் உள்ள எம்.பி.ஏ (MBA) பட்டதாரிகளில் 56 சதவிகிதம் பேருக்கு, வளாகத்தேர்வில் வேலை கிடைப்பதில்லை' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது எம்.பி.ஏ முடித்துள்ள 15,900 மாணவர்களில் 6,900 பேருக்கு மட்டுமே வளாகத்தேர்வில் வேலை கிடைத்துள்ளது.  

எம்.பி.ஏ பட்டப்படிப்பு வழங்கும் கல்லூரிகள் தற்போது பெருகிவிட்டன. கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்த அதே சமயம் அதன் தரம் உயரவில்லை. தரமான கல்லூரிகளில் எம்.பி.ஏ படித்த மாணவர்கள் அனைவரும், வளாகத்தேர்வு மூலம் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

MBA 

எம்.பி.ஏ படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகச் சரிந்துவருகிறது.  இந்த ஆண்டு எம்.பி.ஏ பாடப்பிரிவு உள்ள கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 45 சதவிகிதம் நிரம்பாமல் உள்ளது. அதாவது 371 அரசுக் கல்லூரிகள், எம்.பி.ஏ படிப்புக்கான பிரத்யேக கல்லூரிகள், சுயநிதி இன்ஜினீயரிங் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றில் மொத்தம் 13,500 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இந்தக் காலி இடங்களுக்கு 6,200 விண்ணப்பங்களே வந்துள்ளன.

வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை காரணமாக, கல்லூரிகளில் எம்.பி.ஏ படிப்புக்கான பெரும்பாலான இடங்கள்  நிரம்பாமல் உள்ளன எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தொடக்கத்தில் குறிப்பிட்ட சில இன்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் குறிப்பிட்ட சில பிசினஸ் கல்லூரிகளில் மட்டுமே எம்.பி.ஏ பட்டப்படிப்பு இருந்தது. தற்போது பெரும்பாலான கல்லூரிகளில் எம்.பி.ஏ இருக்கிறது. இதனால், அந்தப் படிப்பின் தரம்  குறைந்துள்ளது. இந்திய மேலாண்மைக் கல்லூரி (IIM), எக்ஸ்.எல்.ஆர்.ஐ, எம்.டி.ஐ ஆகிய கல்லூரிகள், மாணவர்களுக்கு நல்ல சம்பளத்தில் 100 சதவிகித வேலைவாய்ப்பைத் தொடர்ந்து வழங்கிவருகின்றன. மாணவர்களுக்கு அனைத்து வசதிகளுடன்கூடிய தரமான கல்வியை வழங்குவதால், 100 சதவிகித வேலைவாய்ப்பு சாத்தியமாகியுள்ளது.

MBA

நாம் தற்போது நான்காம்கட்ட தொழில்துறைச்  சீர்திருத்தங்களை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். இந்தக் காலகட்டத்தில் அதிக அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன; வேலைவாய்ப்புகளும் குறைக்கப்பட்டுள்ளன. எனவே, தற்போதைய காலகட்டத்தில் தொழில் துறைக்கு என்ன தேவையோ அதை பூர்த்திசெய்யும் வகையில் எம்.பி.ஏ படிப்பின் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். அப்போதுதான்  எளிதில் வேலை  கிடைக்க வாய்ப்புள்ளது என்று இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிக எண்ணிக்கையிலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்தான் பிசினஸ் கல்லூரிகளுக்குச் சென்று வளாகத்தேர்வில் மாணவர்களைத் தேர்வுசெய்கின்றன. தற்போது, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளில் அதிகளவில் மாற்றங்கள் வந்துள்ளன. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப பாடத்திட்டங்களை மாற்றி மாணவர்களை உருவாக்கியுள்ள கல்லூரிகளிலிருந்து மட்டுமே மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெருகின்றனர். இன்றைய தொழில்துறைக்கு வெறும் மேலாளர்கள் தேவைப்படுவதில்லை. பிரச்னையைப் புரிந்துகொண்டு விரைவாகத் தீர்வு கண்டு, சீரான முறையில் சிறப்பாக லாபம் ஈட்டும் செயல்வீரர்கள் மட்டுமே தேவைப்படுகின்றனர் என்பது தொழில் துறையினரின் கருத்து.

மாணவர்கள் கல்லூரியின் தரம், பாடத்திட்டம், அடிப்படை வசதிகள், வளாகத்தேர்வு போன்ற பல்வேறு விஷயங்களை அறிந்துகொண்டு எம்.பி.ஏ பட்டப்படிப்பில் சேர்வது நல்லது. அப்போதுதான் மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாக அமையும்.


டிரெண்டிங் @ விகடன்