`தலைவர ஓரமா நின்னு பார்த்துட்டு போயிடுறேன் பா..! - தொண்டர்களை நெகிழ வைத்த மூதாட்டி #Karunanidhi

தி.மு.க தலைவர் கருணாநிதியைப் பார்க்க திருக்குவளையிலிருந்து தனியாகச் சென்னை வந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் ரத்தினம் என்னும் மூதாட்டி.

ரத்தினம்
 

கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் ஓய்வில் இருக்கும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை, வயது முதுமை காரணமாக சற்று நலிவடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் முக்கிய அரசியல் பிரமுகர்கள் கோபாலபுரம் இல்லத்துக்கு வருகை தர தொடங்கினர். ஓ.பி.எஸ், திருமாவளவன், கமல்ஹாசன் என அனைத்துத் தலைவர்களும் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்துச் சென்றனர். இதையடுத்து நேற்றிரவு முதலே தொண்டர்கள் கோபாலபுரத்தில் குவியத் தொடங்கிவிட்டனர். கலைஞர் வீட்டுக்குச் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டுள்ளன.

கருணாநிதி உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளால் தி.மு.க தொண்டர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். குறிப்பாக, கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையில் மக்கள்  மிகுந்த வருத்தத்தோடு இருப்பதாகக் கூறப்படுகிறது. திருக்குவளையைச் சேர்ந்த 85 வயது ரத்தினம் என்னும் மூதாட்டி, கருணாநிதி உடல்நலம் குறித்து கேள்விப்பட்டதும் இன்று அதிகாலையே பஸ் ஏறி சென்னை வந்துவிட்டார். கோபாலபுரத்தில் அவரைக் கண்ட தி.மு.க தொண்டர்கள் அவர் பற்றி விசாரித்துள்ளனர்.

கருணாந்தி
 

`இன்னைக்கு காலைல பஸ் ஏறி மத்திய கைலாஷ் வந்துட்டேன். அங்கிருந்து அட்ரஸ் கேட்டு பஸ் புடிச்சு இங்க வந்தேன். ஒரேயொரு தடவ அவர ஓரமா நின்னு பார்த்துட்டு போயிடுறேன் பா... எனக்கு கல்யாணம் பண்ணி வச்சதே தலைவர்தான் பா’ என்று கூறியிருக்கிறார் கண்ணீருடன். இதைக் கவனித்த தி.மு.க எம்.எல்.ஏ பி.கே.சேகர் பாபு, அவரை மு.க.ஸ்டாலினிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். கருணாநிதிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரை இப்போது பார்க்க முடியாது என்றும் ஸ்டாலின் மூதாட்டியிடம் பொறுமையாக விளக்கியிருக்கிறார். அதன் பின்னர், அங்கிருந்து புறப்பட்டிருக்கிறார் ரத்தினம். அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து தி.மு.க தொண்டர்கள் வழியனுப்பி வைத்துள்ளனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை சிவகுமார் என்னும் தி.மு.க பிரமுகர் ஒருவர் முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!