காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும் கடைமடைக்குத் தண்ணீர் வரவில்லை! விவசாயிகள் வேதனை | Farmers staged protest in Tanjore

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (27/07/2018)

கடைசி தொடர்பு:20:20 (27/07/2018)

காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும் கடைமடைக்குத் தண்ணீர் வரவில்லை! விவசாயிகள் வேதனை

காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும், வாய்க்கால்கள் தூர் வாரப்படாததால்,  கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் வரவில்லை என தஞ்சை விவசாயிகள் வேதனையோடு கலெக்டரிடம்  புகார் கூறினர். மேலும், ஒரு கையில் வெல்லம் மறுகையில் தென்னை மட்டை ஆகியவற்றைப் பிடித்துக்கொண்டு வயிற்றிலும், உடலிலும் அடித்துக்கொண்டு நுாதன  போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் அண்ணாதுரை தலைமையில், விவசாயிகள் குறைதீர்  கூட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் மற்றும் விவசாயசங்கத்தைச் சேர்ந்த  பலர் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன், விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் சுகுமாரன், ``கர்நாடகத்தில் இருந்து  தண்ணீர்  வந்துவிட்டாலும், விவசாயத்துக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. வாய்க்கால்களைத் துார் வார வேண்டும் என பல மாதங்களாக  வலியுறுத்திவந்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும் கடைமடைப் பகுதியான ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதியிகளுக்கு தண்ணீர் வரவில்லை’’ என்று வேதனையோடு தெரிவித்தார்.

இதையடுத்து, கூட்ட அரங்கிற்கு வெளியே உள்ள  அலுவலக வளாகத்தில், `காவிரியில் வெள்ளம் சென்றாலும், கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை’ என்று கூறி, ஒரு கையில் வெல்லம் மற்றும் மறு கையில் தென்னை மட்டையைப் பிடித்துக்கொண்டு வயிற்றிலும், உடலிலும் அடித்துக்கொண்டும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், நெல், கரும்பு, பருத்தி உள்ளிட்ட விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை அறிவிப்பிலும், பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திலும் மத்திய அரசு விவசாயிகளுக்கு மோசடிசெய்துள்ளது. விவசாயிகளிடமிருந்து உரிய காலத்தில் நெல் கொள்முதல் செய்யாமல், கொள்முதல் நிலையங்களைத்  திறப்பதிலும், கொள்முதல் செய்வதிலும் தமிழக அரசு மந்த நிலையில்  செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதைக் கூறி, காவிரிப் பாசன விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள்  பேப்பரில் பட்டை நாமம்  போட்டு  அதைப் பிடித்துக்கொண்டு  கோஷமிட்டபடி குறைத்தீர் கூட்டத்திலிருந்து வெளிநடப்புசெய்து, போராட்டம் நடத்தினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


அதிகம் படித்தவை