வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (27/07/2018)

கடைசி தொடர்பு:22:30 (27/07/2018)

சிம்கார்டு இல்லாமல் மொபைலில் பேசும் வசதி! - பி.எஸ்.என்.எல் சேவை மையங்களில் முன்பதிவு தொடக்கம்

சிம்கார்டு இல்லாமல் மொபைலில் பேசும் வசதியை பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிமுகம்செய்துள்ளது. இதற்கான முன்பதிவு நாகர்கோவிலில் தொடங்கியது.

பி.எஸ்.என்.எல்

நாகர்கோவில் தொலைத் தொடர்புத்துறை பொது மேலாளர் சஜிகுமார் இதுபற்றி கூறுகையில், 'நாட்டில் முதன்முறையாக இணையதளம் வாயிலாக இயங்கும் தொலைபேசி சேவையை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. அதிநவீன, அடுத்த தலைமுறை நெட்வொர்க் (என்.ஜி.என்) இணைய தொலைபேசி வசதியை வாடிக்கையாளர்கள் அனைவரும் பெறலாம். இணைய சேவை உள்ள ஆன்ட்ராய்ட், விண்டோஸ், ஆப்பிள் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் மொபைல் ஃபோன்கள், டேப்லெட்டுகள், கணினிகள், லேப்டாப்கள்ஆகியவற்றில் விங்ஸ்(Wings) எனப்படும் செயலியை நிறுவி, வரம்பற்ற வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இந்தச் செயலி மூலம் எந்தவொரு தொலைபேசி நிறுவனத்தின் மொபைல் மற்றும் லேண்ட்லைன் எண்களையும் அழைக்க முடியும். வைஃபைவசதி உடையவர்களுக்கு இந்தச் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சஜிகுமார்

இந்தச் சேவைக்கு சிம்கார்டு அவசியம் இல்லை. எந்த நெட்வொர்க் வைஃபை மூலமாகவும் அழைப்புகளை மேற்கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் 1,099 ரூபாயை ஒரு முறை கட்டணமாகச் செலுத்தி 10 இலக்க எண்ணை பெற்று, இந்தச் சேவையைத் தொடங்கலாம். வெளிநாடுகளுக்குப் பேசும் வசதியைப் பெற, 2 ஆயிரம் ரூபாயை வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும். அறிமுகச் சலுகையாக ஓர் ஆண்டுக் கட்டணத்துடன் நாட்டின் அனைத்து நெட்வொர்க்கிலும் ஆண்டு முழுவதும் பேசும் வசதியை விங்ஸ் ஆப் அளிக்கிறது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்தச் செயலியைப் பெற பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சேவைமையங்கள் அல்லது www.bsnl.co.inஎன்றஇணையதளம் வாயிலாகஒரு முறை கட்டணத்தைச் செலுத்தி பெறமுடியும்' என்றார்.