"குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை ஆன்லைனின் புகார் அளிக்கலாம்!" - ஆட்சியர் தகவல்! | People can report sexual harassment against children through online, says Karur district collector

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (27/07/2018)

கடைசி தொடர்பு:23:00 (27/07/2018)

"குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை ஆன்லைனின் புகார் அளிக்கலாம்!" - ஆட்சியர் தகவல்!

 "குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் பற்றி ஆன்லைனில் புகார் அளிக்கலாம். குழந்தைகளைத் துன்புறுத்தும் நபர்கள்மீது உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். 

பாலியல் கொடுமை

சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பில், பெற்றோருடன் தங்கியிருந்த மாற்றுத்திறனாளி பள்ளிச் சிறுமியை பதினேழு கயவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுக்க ஆங்காங்கே சிறுமிகளுக்கு சில கயவர்களால் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர், 'குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைப் பற்றி ஆன்லைனில் புகார் அளிக்கலாம்' என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் விடுத்துள்ள அறிக்கையில், கரூர் ஆட்சியர் அன்பழகன்"மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் கண்காணிக்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின்மூலம் 2012 முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. தற்போது, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மேம்பாட்டு அமைச்சகத்தின்மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்மீது தக்க தண்டனைகள் அளிக்கும்பொருட்டு, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்,  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில் பாதிகப்பட்டோர் தங்கள் புகாரை தாங்களே அளிக்கலாம். www.ncpcr.gov.in என்ற வலைதளத்தின் முகப்புப் பக்கத்தில் மின்னணு புகார் பெட்டி(POCSO - E - BOX) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், பாதிக்கப்பட்ட குழந்தைகளோ, பொதுமக்களோ புகார் அளிக்கலாம். மேலும்,பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 உட்பிரிவு 21ல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்குறித்து புகார் அளிக்கத் தவறும் நபர்கள் மற்றும் புகாரைப் பதிவுசெய்ய நிலைய அலுவலர்கள் தவறினாலோ அல்லது மறுத்தாலோ ஆறுமாதம் முதல் ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதித்து தக்க தண்டனைக்கு உள்ளாக்கபடுவார்கள்" என்று சொல்லப்பட்டுள்ளது.