"குளித்தலை நகரத்துக்குள் வராமல் டிமிக்கி கொடுக்கும் பேருந்துகள்!" - புலம்பும் மக்கள்!

 

 குளித்தலை

"கரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சியான குளித்தலைக்கு இரவு நேரத்தில் எந்தப் பேருந்துகளும் வராமல், பைபாஸ் வழியாகப் போகின்றன. இதனால், நாங்கள் அவதிப்படுகிறோம்" என்று  நகராட்சி மக்கள் புலம்புகின்றனர்.

கரூர் டு திருச்சி மார்க்கத்தில் இருக்கிறது குளித்தலை நகராட்சி. இந்த மார்க்கத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை போகும் அனைத்து பேருந்துகளும் நகராட்சிக்குள் நுழையாமல் பைபாஸ் வழியாகப் பறந்துவிடுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் இரவுகளில் ஐந்து கிலோமீட்டர்கள் நடப்பதாகவும் அவர்கள் குமுறுகிறார்கள். இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி மனு கொடுத்தும் உள்ளனர். மனு கொடுத்தவர்களிடம் பேசினோம்.

"கரூர் மாவட்டத்தில் ஒரு முக்கிய நகராட்சி குளித்தலை. இந்த மார்க்கத்தில் செல்லும் அனைத்து அரசுப் பேருந்துகளும் பைபாஸ் வழியாகப் போகாமல், குளித்தலை வந்து பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்ல வேண்டும் என்பதுதான் நடைமுறை. ஆனால், சமீபகாலமாக அரசுப் பேருந்துகள் இரவு நேரங்களில் குளித்தலை பேருந்து நிலையம் வந்து செல்லாமல், பைபாஸ் வழியாகப் சென்றுவிடுகின்றன. இதனால், அந்தப் பேருந்துகளில் பயணிக்கும் இப்பகுதி மக்கள் பாடு பெரும் பாடாக இருகிறது. பைபாஸிலேயே அம்போவென இறக்கிவிட்டுட்டு போயிடுறாங்க. அதோடு, பேருந்து நடத்துநர்கள் பயணிகளை, திட்டவும் செய்கிரார்கள். 

இன்னும் பலர் இரவு நேரத்தில் தங்கள் பேருந்துகளில் குளித்தலை பயணிகளை ஏற்றுவதே இல்லை. இதனால், இரவுகளில் பைபாஸில் இறக்கிவிடப்படும் பயணிகள் ஐந்து கிலோமீட்டர்கள் பயணித்து குளித்தலையை அடைய வேண்டி இருக்கு. பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல். அதனால், உடனே கரூர் டு திருச்சி மார்க்கத்தில் செல்லும் அனைத்து அரசுப் பேருந்துகளையும் இரவு நேரங்களில் குளித்தலை பேருந்துநிலையம் வழியாகப் செல்ல போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்டத்திலேயே இந்த நிலை. அவர் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை என்றால், வரும் 4 -ம் தேதி கரூர் டு திருச்சி மார்க்கத்தில் இரவு நேரங்களில் பைபாஸ் வழியாகப் செல்லும் பேருந்துகளை சிறைபிடிக்கும் போராட்டத்தை நடத்த இருக்கிறோம்" என்றார்கள் அதிரடியாக!
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!