“அ.தி.மு.கவை போல லஞ்சம், ஊழல் மிகுந்த ஆட்சியை பார்த்தில்லை” - சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்

ஊழல்

“அ.தி.மு.கவைப் போல லஞ்சம், ஊழல் மிகுந்த ஒரு ஆட்சியை நான் பார்த்ததில்லை” என தி.மு.க துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறியிருக்கிறார்.

சொத்து வரி உயர்வைக் கண்டித்து, அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் முன் தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அந்தவகையில், ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் முத்துசாமி உட்பட தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தி.மு.க

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய சுப்புலட்சுமி ஜெகதீசன், “வீட்டு வரி, வாடகை வீட்டு வரி, குப்பை வரி, தண்ணீர் வரி என வரலாறு காணாத வகையில் இந்த அரசு வரிகளை உயர்த்தியிருக்கிறது. சரியாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சி மன்றங்களுக்குத் தேர்தல் நடந்து, உள்ளாட்சி அதிகாரிகள் இருந்திருந்தால் இந்நேரம் மத்தியில் இருந்து நமக்கு ரூ. 3,500 கோடி நிதி கிடைத்திருக்கும். தி.மு.க வெற்றி பெற்றுவிடும் என்ற அச்சத்தின் காரணமாகவே, ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தேர்தலை நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. உள்ளாட்சித் துறை ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் தான், இப்படி வரி அதிகரிப்பைச் செய்திருக்கிறார்கள். இதனால், ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே, இதனைத் தமிழக அரசு கருத்தில் கொண்டு வரி உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “ஒரு டெண்டரின் மதிப்பு ரூ. 5 கோடி என்றால், இவர்கள் 7 கோடி எனக் கணக்கு காட்டி அதன்மூலம் 2 கோடி ரூபாய் கொள்ளையடிக்கின்றனர். இப்படி டெண்டர் என்ற பெயரில் மக்களுடைய வரிப் பணத்தை அ.தி.மு.கவினர் கொள்ளையடிக்கிறார்கள். இந்த அளவிற்கு ஒரு ஊழல், லஞ்சம் மிகுந்த ஆட்சியை நான் பார்த்ததில்லை. அ.தி.மு.கவில் உள்ள 40 எம்.பிக்களுடைய ஆதரவு மத்திய அரசிற்குத் தேவை. அதேபோல, தாங்கள் சேர்த்து வைத்துள்ள சொத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஆளும் அ.தி.மு.க அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டுக் கிடக்கிறது. இப்படி தங்களுடைய சுயநலனுக்காகவே மத்திய அரசும், மாநில அரசும் செயல்பட்டு வருகின்றன. மத்திய, மாநில அரசுகளின் இத்தகைய சுயநலத்தால், தமிழக மக்கள் தான் மிகவும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்” என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!