“கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்யட்டும்” கிரண்பேடியை விளாசும் நாராயணசாமி

“கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்யட்டும்” என கிரண்பேடியை கடுமையாக விமர்சித்திருக்கிறார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

நாராயணசாமி

”புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கோருவதை காரைக்கால், மாஹி மற்றும் ஏனாம் மக்கள் விரும்பவில்லை” என்று கவர்னர் கிரண்பேடி கருத்து தெரிவித்திருந்தார். அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய அம்மாநில முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைப்பதை தடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. புதுச்சேரிக்கு என்ன செய்தால் நன்மை ஏற்படும் என்பது அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும்தான் தெரியும். புதுச்சேரி இந்தியாவுடன் இணையும்போது புதுச்சேரியின் தனித்தன்மையை பாதுகாப்போம் என்று பிரெஞ்சு அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் என நான்கு பிராந்தியமும் ஒன்றாக இணைந்துதான் மாநில அந்தஸ்தை பெறுவோம்.

கிரண்பேடி

நிலப்பகுதியில் பிரிந்து கிடப்பதாக கூறினால் புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள பாகூர், திருக்கனூர், காலாப்பட்டு பகுதிகளும் கூட பிரிந்துதான் உள்ளது. அப்படிப் பார்த்தால் புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிக்கு மட்டும்தான் மாநில அந்தஸ்து கிடைக்கும். கவர்னர் கிரண்பேடி அவரது எல்லையில்தான் செயல்பட வேண்டும். அரசியல்வாதியாக செயல்பட வேண்டும் என நினைத்தால் அரசியலுக்கு வரவேண்டும். ஆனால் கவர்னராக இருந்து கொண்டு அரசியல்வாதியைப்போல் செயல்படக்கூடாது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கொடுக்கக்கூடாது என்று சொல்வதற்கு இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? கவர்னர் கிரண்பேடி புதுச்சேரியை சேர்ந்தவரா? எங்கள் மாநிலத்தின் பிரச்னையை நாங்கள் தீர்த்துக் கொள்வோம். கவர்னர் கிரண்பேடி அவரது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்யலாம்” என்றார். 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!