வெளியிடப்பட்ட நேரம்: 12:22 (28/07/2018)

கடைசி தொடர்பு:12:22 (28/07/2018)

பணிக்குச் சேர்ந்த 25-வது நாளில் காவலர் சந்தித்த சவால்!

  காவலர் ராஜதுரையை பாராட்டிய கமிஷனர்

சென்னை மெரினாவில், பெண்ணிடம் செல்போன் பறித்துச்சென்ற திருடனை விரட்டிப் பிடித்துள்ளார், ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர்.  அவர், பணிக்குச் சேர்ந்த 25-வது நாளிலேயே இந்த துணிச்சலான செயலைச் செய்துள்ளார். 

சென்னை மெரினா, உழைப்பாளர் சிலை அருகே இளம்பெண் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அவரைப் பின்தொடர்ந்து வந்த ஒருவர், அந்தப் பெண்ணிடமிருந்து செல்போனைப் பறித்துக்கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அந்தப் பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்களிடம் விவரத்தைத் தெரிவித்தார். அப்போது, உழைப்பாளர் சிலை அருகே பாதுகாப்புப் பணியில் காவலர் ராஜதுரை இருந்துள்ளார். அவருக்குத் தகவல் தெரிந்ததும் திருடனை விரட்டியுள்ளார். திருடன்,மெயின் சாலையிலிருந்து  கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக ஓடத் தொடங்க, அவரை விடாமல் விரட்டிய ராஜதுரை, நீச்சல்குளம் அருகே மடக்கிப் பிடித்தார். திருடன், அண்ணாசதுக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இந்தத் தகவலை அறிந்த கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், காவலர் ராஜதுரையை நேரில் அழைத்துப் பாராட்டிப் பரிசு வழங்கினார். அது, என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் காவலர் ராஜதுரை. 

சம்பவத்தன்று என்ன நடந்தது என்று ராஜதுரையிடம் கேட்டதற்கு, ``என்னுடைய சொந்த ஊர் கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்குமாரமங்களம் என்ற கிராமம். பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு, காவலர் பணியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேர்ந்தேன். ஆவடியில் பயிற்சி முடித்துவிட்டு, இந்த மாதம் 1-ம் தேதிதான் உழைப்பாளர் சிலை அருகே பணிக்கு வந்தேன். நான் வேலைக்குச் சேர்ந்து 25-வது நாளில், பெண்ணிடம் செல்போனைப் பறித்துக்கொண்டு ஓடிய திருடனைப் பிடித்தேன். திருடனைப் பிடிக்க என்னுடைய பெல்ட்டை ஆயுதமாகப் பயன்படுத்தினேன். பொதுமக்கள் உதவியோடுதான் திருடனைப் பிடித்து, அவரிடமிருந்த செல்போனை மீட்க முடிந்தது" என்றார்.