காட்டில் சடலமாகக்கிடந்த தமிழக வேளாண்துறை அதிகாரி! பெண் விவகாரத்தில் நடந்த கொலையா? | Agriculture Officer murdered near Trichy

வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (28/07/2018)

கடைசி தொடர்பு:14:05 (28/07/2018)

காட்டில் சடலமாகக்கிடந்த தமிழக வேளாண்துறை அதிகாரி! பெண் விவகாரத்தில் நடந்த கொலையா?

திருச்சி அருகே, வேளாண்துறை அதிகாரி வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
படுகொலை செய்யப்பட்ட வேளாண்துறை அதிகாரி பூபதி கண்ணன்
 
புதுக்கோட்டை மேலவீதி மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர்,  பூபதி கண்ணன். இவர், புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மைத் துறை தனி அலுவலராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்துவருகிறார். இவரின் மனைவி அனுராதா, திருச்சி மாவட்ட ஊரக வளர்ச் சித் துறையில் நிர்வாகப் பொறியாளராகப் பணிபுரிந்துவருகிறார். இவர்களுக்கு, இதிலா என்கிற 16 வயது பெண் குழந்தை உள்ளது. தற்போது, திருச்சி ராஜா காலனி பகுதியில் குடியிருந்துவரும் இவர், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ரிங் ரோடு அருகே உள்ள மாத்தூர் காட்டுப் பகுதியில் இன்று காலை கொலைசெய்யப்பட்டு, சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
 
அப்பகுதிக்குச் சென்றவர்கள் போலீஸாருக்குத் தகவல் கூற,  மாத்தூர் காவல் ஆய்வாளர் ஜெயராம் தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்துக்கு  விரைந்துவந்து, பாரதி கண்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மார்ஷல் என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் சோதனையிடப்பட்டது தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் சோதனை நடத்திவருகிறார்கள். கொலைசெய்யப்பட்ட பாரதி கண்ணன்  நான்கு செல்போன்களைப் பயன்படுத்துவதால், அந்த எண்கள் மூலம் கொலைகுறித்து  போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
 
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், பாரதி கண்ணன் அரை நிர்வாண நிலையில் கிடந்ததாகவும், அவர் வந்த காரில் டிபன் பாக்ஸ் திறந்த நிலையில் இருந்ததும், பெண்ணின் உள்ளாடைகள் கிடந்ததாகவும், கால்தடங்கல் இருந்ததும் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தை திருச்சி மண்டல டி.ஐ.ஜி லலிதா லெட்சுமி நேரில் பார்வையிட்டார். கொலைக்கு பெண் தொடர்பு இருக்கலாம் என்றும், கடத்திக் கொண்டுவந்து காட்டுப் பகுதியில்  கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், பாரதி கண்ணனையும், காரையும் காணவில்லை என அவரது குடும்பத்தார், புதுக்கோட்டை எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.