வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (28/07/2018)

கடைசி தொடர்பு:13:35 (28/07/2018)

மக்களை அச்சுறுத்திவந்த 8 திருடர்களைக் குறிவைத்துப் பிடித்தது போலீஸ்!

மதுரையில், இரவு நேரங்களில் தொடர்ச்சியாக வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுவந்த எட்டு திருடர்களைப் பிடித்த தனிப்படையினர், மதுரை போலீஸ் கமிஷனரின் பாராட்டைப் பெற்றுள்ளனர்.

மக்களை அச்சுறுத்திய


மதுரை கமிஷனராகப் பொறுப்பேற்ற டேவிட்சன் தேவாசீர்வாதம், மாநகரில் சட்டம் ஒழுங்கை நெறிப்படுத்துவதுடன், திருட்டுக் குற்றங்களைத் தடுக்க பலவேறு முயற்சிகளைச் செயல்படுத்திவருகிறார். அதுபோல, காவல்துறையினர் குற்றத்தில் ஈடுபட்டாலும் உடனே நடவடிக்கை எடுத்துவருகிறார். இந்த நிலையில், மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடக்கவே, தனியாகச் செல்லவே மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டது. இதைத் தடுப்பதற்கு இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமையில் தனிப்படையை அமைத்தார் கமிஷனர். வழிப்பறி சம்பவங்கள் நடைபெறும் பகுதிகளில், தொடர் கண்காணிப்பில் தனிப்படையினர் ஈடுபட்டு வந்தனர்.

இரண்டு நாள்களுக்கு முன், தொடர் வழிப்பறியில் ஈடுபட்டுவந்த தினேஷ், கலைச்செல்வி, பாண்டிய விநாயகம், விஜயசுதர்சன், சுரேஷ்குமார், சம்பத்குமார், மகேஸ்வரி, மணிமேகலை ஆகிய எட்டு நபர்களைக் கைதுசெய்துள்ளனர். மதுரையில் நடந்துவரும் பல வழிப்பறிகளில் இவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.  இவர்களிடமிருந்து 110 பவுன் தங்க நகைகள், 11 செல்போன்கள் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, எட்டு நபர்களும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். தனிப்படையினரின் சிறப்பான பணியைப் பாராட்டி, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார். தொடர்ந்து, வழிப்பறித் திருடர்கள் கண்காணிக்கப்பட்டுவருகிறார்கள்

நீங்க எப்படி பீல் பண்றீங்க