கருணாநிதிக்கு மருத்துவ உதவி செய்யத் தயார் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு, அரசு சார்பில் மருத்துவ உதவிகள் செய்யத் தயாராக உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

முதல்வர் பழனிசாமி

தி.மு.க தலைவர் கருணாநிதி, கடந்த இரு தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். இதனால், அவரின் நலன்பற்றி விசாரிக்க நேற்று முன்தினம் மாலையில் இருந்து கோபாலபுரம் இல்லத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வந்துசெல்கின்றனர். நேற்று இரவு கருணாநிதிக்கு ரத்தஅழுத்தம் அதிகமானதால், அவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக தி.மு.க மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 

கருணாநிதி உடல்நிலை சீராக இல்லை என்பதை அறிந்த தொண்டர்கள், நேற்று முன்தினம் இரவுமுதல் அவரின் இல்லத்தில் தொடங்கி தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வரை அனைத்து இடங்களிலும் அலைமோதுகின்றனர். தி.மு.க தலைவரின் உடல்நிலை பற்றி அறிந்துகொள்ளவும், அவர் விரைவில் குணமடைய வேண்டியும் பலர் நள்ளிரவு முதல் மருத்துவமனைக்கு வெளியே காத்துக்கிடக்கின்றனர். மூன்றாவது நாளாக, இன்றும் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் வந்து கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரித்துச்செல்கின்றனர். 

இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ நீட் தேர்வு தேவையில்லை என்பதே தமிழக அரசின் கருத்தாக உள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பால்தான் அதை அமல்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தி.மு.க தலைவர் கருணாநிதி தற்போது நலமாக உள்ளார். காவேரி மருத்துவமனையில் அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகின்றன. 5 முறை முதல்வராக இருந்தவர், தற்போது எம்.எல்.ஏ-வாக உள்ளார். அவரின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டால், அரசு சார்பில் கருணாநிதிக்கு மருத்துவ உதவிகள் செய்யத் தயார்” என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!