வலையில் சிக்கிய அரிய வகை கடல்பசு! வாழ்வளித்த மீனவர்கள் | Rare fish species caught on the fisherman's net;

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (28/07/2018)

கடைசி தொடர்பு:13:50 (28/07/2018)

வலையில் சிக்கிய அரிய வகை கடல்பசு! வாழ்வளித்த மீனவர்கள்

புதுக்கோட்டை மாவட்ட கடற்பகுதியான மணல்மேல்குடியில், மீனவர்கள் வலையில் சிக்கிய அழிந்துவரும் அரிய வகை கடல்வாழ் உயிரினமான கடல்பசு,  மீண்டும் கடலில் விடப்பட்டது.

மீனவர்கள் வலையில் சிக்கிய கடல்பசு

மன்னார் வளைகுடா கடல் பகுதி, அரிய வகை கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்கமாக இருந்துவருகிறது. இப்பகுதியில், 3,600-க்கும் மேற்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன. இவற்றில், அழியும் தருவாயில் உள்ள அரிய வகை உயிரினங்களும் சில உள்ளன. இவற்றில் ஒன்று கடல்பசு. இது, கடலில் வளரும் புற்களை உணவாக உட்கொள்வதை வழக்கமாகக்கொண்ட உயிரினம் ஆகும். தற்போதுள்ள நிலையில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 200-க்கும் குறைவான கடல் பசுக்களே உள்ளன. இந்த அரிய வகை கடல்வாழ் உயிரினத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் பணிகளில் மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தினர் ஈடுபட்டுவருகின்றனர். கடற்பசு உணவாக உட்கொள்ளக்கூடிய கடற்புற்களை அவற்றின் வாழிடங்களில் வளர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. கடற்பசுக்களைப் பாதுகாக்க, 'கடல்பசுக்களின் நண்பர்கள்' என்ற தன்னார்வ அமைப்பினர், மீனவர்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்திவருகின்றனர்.

கடல் பசு

இந்நிலையில், நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி கடல் பகுதியில் மீனவர்கள் விரித்த வலையினுள் கடல்பசு ஒன்று சிக்கியது. மீனவர்கள் கரைக்கு வந்த பின்னரே இது தெரியவந்தது. இதையடுத்து, வனத்துறையினருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். அவர்கள், வன உயிரினப் பாதுகாப்பு அலுவலர்களுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அவர்கள், மீனவர்களின் வலையில் சிக்கிய கடல்பசுவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், மீனவர்கள் மற்றும் வனத்துறையினர் உதவியுடன்  மன்னார் வளைகுடா  வன உயிரினக் காப்பாளர் அசோக்குமார், மண்டபம் ரேஞ்சர் சதீஷ் ஆகியோர் மேற்பார்வையில் கடல் பசுவை மீண்டும் கடலில் விட்டனர். கடலில் விடப்பட்ட அந்த கடல்பசு உற்சாகமாக நீந்திச்சென்றது.