காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதி! ஆளுநர் புரோஹித், குலாம் நபி ஆசாத் நலம் விசாரிப்பு

கருணாநிதியின் உடல்நிலையைப் பற்றி விசாரிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனைக்கு வந்திருந்தனர். 

பன்வாரிலால் புரோகித்

கடந்த இரண்டு தினங்களாக, ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டிப்போட்டுள்ளது கருணாநிதியின் உடல்நிலைகுறித்த செய்திகள். சென்ற வியாழக்கிழமை மாலை முதல் கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டு உடல்நிலை சற்று மோசமானது. உடனடியாக மருத்துவக் குழு அவரது வீட்டுக்கே வந்து சிகிச்சைகள் மேற்கொண்டனர். சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை சற்று தேறியதாகவும், நேற்று இரவு ரத்தஅழுத்தம் அதிகமானதால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தி.மு.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

தி.மு.க தலைவருக்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்தி தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் தெரிந்து, பல அரசியல் தலைவர்கள் நேற்று முன்தினம் மாலை முதல் கோபாலபுரத்தை நோக்கி வரத் தொடங்கிவிட்டனர். முதல் நாள் மாலை, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி ஆகியோரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போன்ற பலரும் வந்திருந்தனர். 

இதைத் தொடர்ந்து, நேற்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி , மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போன்றோரும் சினிமா துறையைச் சேர்ந்த ராதாரவி, வைரமுத்து , நடிகர் விக்ரம், குஷ்பு, ஸ்ரீ பிரியா, பாக்யராஜ் ஆகியோரும் வந்திருந்தனர். 

மூன்றாவது நாளான இன்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியைக் காண தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் , காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஆடிட்டர் குருமூர்த்தி, டி.டி.வி தினகரன் ஆகியோர் வந்திருந்தனர். 

கருணாநிதியின் உடல்நிலைகுறித்து மருத்துவர்களிடம் நேரடியாகக் கேட்டறிந்த பின், மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த குலாம் நபி ஆசாத், “ கருணாநிதி ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாங்கள் ஸ்டாலின், கனிமொழி மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்துப் பேசினோம். பிறகு மருத்துவர்களையும் சந்தித்தோம். அவர்கள் கூறியது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாகத் தெரிவித்தனர். மருத்துவர்கள் மிகச் சிறப்பான முறையில் சிகிச்சையளித்துவருகின்றனர். ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகிய இருவரும் கருணாநிதியின் உடல்நிலைகுறித்து அவரது குடும்பத்தாரிடம் கேட்டறிந்தனர். சில நாள்களில் கருணாநிதி வீடுதிரும்புவார் என நான் நிச்சயமாகக் கூறுகிறேன்'' என்றார்.

பின்னர், கருணாநிதியின் உடல்நிலையைப் பற்றி குடும்பத்தாரிடம் கேட்டு விசாரித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், ‘'தி.மு.க தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நிச்சயம் விரைவில் குணமடைவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!