``கூலிவேலை செஞ்சாதான் சோறு... வீடுகளும் போயிட்டா?!'' - மாளகாப்பாடியின் மூத்தவள் | Dharmapuri Maalagapaadi people talk about the issues in eight-way express lane

வெளியிடப்பட்ட நேரம்: 14:59 (28/07/2018)

கடைசி தொடர்பு:15:22 (28/07/2018)

``கூலிவேலை செஞ்சாதான் சோறு... வீடுகளும் போயிட்டா?!'' - மாளகாப்பாடியின் மூத்தவள்

உழைத்து உருவாக்கிய நகரங்களை ஸ்மார்ட் ஆக்குவதற்காகவும் சிங்காரமாக்குவதற்காகவும் எப்போதும் புறநகருக்குத் தூக்கி எறியப்படுபவர்கள் இந்த எளிய மக்கள்தான். இந்த விஷயத்தில், மாளகாப்பாடி மக்கள் சுற்றியிருக்கும் எல்லா கிராமத்து நிலங்களிலும் உழைத்து உழைத்தே தேய்ந்தவர்கள். நிலம் இல்லாத அவர்களுக்கு, கூரைகளும் பறிபோக இருக்கின்றன. இதுவும் வளர்ச்சிக்காகவா?

``கூலிவேலை செஞ்சாதான் சோறு... வீடுகளும் போயிட்டா?!'' - மாளகாப்பாடியின் மூத்தவள்

``தமிழ்நாட்டில் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகவே, அரசியல் கட்சிகள் எட்டு வழிச் சாலையை எதிர்க்கிறார்கள். நீங்கள் அரசியல் செய்வதற்காக, மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகளைத் தட்டிப்பறிக்காதீர்கள். இந்தத் திட்டத்தை எதிர்க்கும் அரசியல் கட்சிகள், நாளை இதைப் பற்றிப் புகழ்ந்து பேசுவார்கள்" - பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார். எட்டுவழிச்சாலைத் திட்டத்தைக் குறித்து நடிகர்களும், தமிழகத்தில் ஆட்சியில் இல்லாதவர்களும், இன்னும் பலரும் தெரிவிக்கும் கருத்துகள் தொடர்ச்சியாக ஆவணப்படுத்தப்பட்டுவருகின்றன. 

ஜூன் முதல் வாரம் சேலம், தருமபுரி மக்களைச் சந்தித்து அவர்களது கண்ணீரையும் நியாயத்தையும் பதிவுசெய்தோம். ``எங்கள இப்படி அநாதையா விட்டுட்டு எங்க நிலத்த எடுத்துட்டுப் போனா, நாங் எங்க போயி பொழைக்கிறது? எங்களையெல்லாம் மீறிதான் உங்களால இந்த நிலத்த கொண்டுபோக முடியும். எங்கள ஏதாவது பண்ணிட்டு எடுத்துட்டுப் போங்க” என்னும் ஒருமித்த குரலில்தான் சேலம், தருமபுரி விவசாயிகள் பேசினார்கள்.

மாளகாப்பாடி

மாளகாப்பாடியை அடைந்தபோது போலீஸாரின் கெடுபிடிகள் இருந்தன. அதையும் மீறி பேச முயன்றபோது, மாளகாப்பாடி காலனி மக்களின் அச்சம் வெளிப்பட்டது. அவர்கள் பேசவோ, நாங்கள் செய்தியாளர்கள் என்பதை நம்பவோ தயாராக இல்லை. ``நேத்து விடியிறதுக்கு முந்தி வந்த போலீஸ்காரங்க, `யார்கிட்டயும் பேசக் கூடாது. இந்த ரோடு போடுற விஷயத்தைப் பேசினா, குண்டாஸ்ல உள்ளே போகவேண்டியதுதான்'னு சொன்னாங்க” என்றார், பெயர் தெரிவிக்க விரும்பாத அந்த இளைஞர்.

போலீஸார் சிலர் சுற்றி இருக்க, அப்போதைய நிலையில் பதற்றம் நிறைந்த அவர்களின் மனநிலையை, அச்சத்தைப் புரிந்துகொண்டு நகர்ந்தோம். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்து அமைந்திருக்கிறது மாளகாப்பாடி. இது பட்டியலினத்தவர்கள் வாழும் கிராமம். எட்டு வழிச் சாலைக்காக நில அளவீடு நடத்தப்பட்டதில், மாளகாப்பாடியின் பெரும்பகுதியை அளந்து குறித்திருக்கிறார்கள். பட்டியலின மக்களுக்கு, அந்தக் கிராமத்தில் எந்த நிலமும் சொந்தமில்லை. பெண்கள், அதே கிராமத்திலும் அடுத்த கிராமத்திலும் இருக்கும் நிலங்களில் கூலி வேலை செய்யப்போகிறார்கள். இங்கு இருக்கும் ஆண்கள் பெரும்பாலானோருக்கு, கட்டட வேலைதான் தொழில். சிறு நகரங்களிலும், பெருநகரங்களிலும் சித்தாள், மேஸ்திரி வேலை, பிளம்பர் வேலை போன்றவைதான் இவர்களின் வருமானத்துக்கான வழி.

தொடர் முயற்சிக்குப் பிறகு, 71 வயதில் பேரப்பிள்ளைகளைத் தன்னந்தனியாளாக வளர்க்கும் மாரிதல்லி பேசினார். மாளகாப்பாடியில் இருக்கும் மூத்த குடிமகள் அவர். ``மா அந்தரக்கி ரோடு ஒத்து தல்லி. நாட்டிக்கு பணிசேசி கூடு தின்டாம் சாமி. ஈ இல்லுகூட லேதண்டே சச்சிபோத்தாம் சாமி” என்கிறார். நிலம் இல்லாத அவருக்கு, வீடு மட்டும்தான் ஆதாரம். ஆடியோவில் அவர் பேசும் தெலுங்கு புரியாதவர்களுக்கு, அவரது கண்ணீரின் மொழி புரியலாம். தழுதழுத்த குரலில் அழும் மாரிதல்லியின் சிறு பேரக் குழந்தைகள் இருவரும், மாரிதல்லி நடுங்கி அழுவதைப் பார்த்து, அவர்களும் அழுகிறார்கள்.

உழைத்து உருவாக்கிய நகரங்களை ஸ்மார்ட் ஆக்குவதற்காகவும் சிங்காரமாக்குவதற்காகவும் எப்போதும் புறநகருக்குத் தூக்கி எறியப்படுபவர்கள் இந்த எளிய மக்கள்தான். இந்த விஷயத்தில், மாளகாப்பாடி மக்கள் சுற்றியிருக்கும் எல்லா கிராமத்து நிலங்களிலும் உழைத்து உழைத்தே தேய்ந்தவர்கள். நிலம் இல்லாத அவர்களுக்கு, கூரைகளும் பறிபோக இருக்கின்றன. இதுவும் வளர்ச்சிக்காகவா? 

வளர்ச்சி எது... வளர்ச்சி யாருக்கு என்பது குறித்த தீவிரமான பரிசீலனைக்கான காலம் இது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்