வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (28/07/2018)

கடைசி தொடர்பு:15:30 (28/07/2018)

``மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்” - இந்திய கம்யூனிஸ்ட் அதிரடி!

``மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

கம்யூனிஸ்ட்

கட்சி நிகழ்ச்சிக்காக விழுப்புரம் வந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தி.மு.க-வின் தலைவராக கருணாநிதி பொறுப்பேற்று 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. வேறு எந்தக் கட்சியிலும் இத்தனை ஆண்டுகள்  தலைவர்கள் நீடித்ததில்லை. ஐந்து முறை முதல்வராகப் பொறுப்பேற்று பலராலும் பாராட்டப்பட்டவர் கலைஞர் கருணாநிதி. அவர் விரைவில் குணமடைந்து மக்கள் பணியாற்றுவார் என்று வேண்டுகிறோம். மோடி பொறுப்பேற்றதிலிருந்து தேச ஒற்றுமை மற்றும் மாநில மொழிகள் பாதிப்பு, மதம் மற்றும் சாதிகளால் மக்களைப் பிளவுபடுத்துவது போன்ற பல்வேறு பிரச்னைகள் நாட்டில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. தமிழக அ.தி.மு.க அரசு, மத்திய அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவருகிறது. கிராம ஊராட்சி முதல் தலைமைச் செயலகம் வரை தமிழகத்தில் ஊழல் பெருக்கெடுத்துள்ளது. வருமான வரித்துறை, சிபிஐ போன்றவற்றை ஆயுதமாக வைத்துக்கொண்டு மத்திய அரசு பழிவாங்கிவருகிறது.

நிர்மலா சீதாராமன்

மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளைக் கண்டித்து, 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் தொடங்கப்பட்ட நாளான வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறோம். 15-ம் தேதி பொதுக்கூட்டம் நடக்கவிருக்கிறது. தமிழகத்தில் சொத்து வரியை உயர்த்தியது கண்டிக்கத்தக்கது. இந்த வரியைக் குறைக்கும் செயலில் இறங்காமல், அதை முழுவதுமாக ரத்துசெய்ய வேண்டும். சொத்துக்குவிப்புப் புகாரில் ஓ.பன்னீர்செல்வம் மீது தமிழக அரசு நீதிமன்ற அறிவுரையின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளது. அதற்குப் பின்னரும் அவர், தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்காமல் பதவியில் நீடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதேபோல, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பதவி விலக வேண்டும். இல்லையென்றால், பிரதமர் மோடி அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க