வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (28/07/2018)

கடைசி தொடர்பு:16:50 (28/07/2018)

ரயில்வே வரலாற்றில் இதுவே முதல் முறை - பரங்கிமலை விபத்துக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு!

சென்னை பரங்கிமலை ரயில் நிலைய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு, தலா ரூ.8 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது ரயில்வே தீர்ப்பாயம். 

ரயில் விபத்து

சென்னை மின்சார ரயில் நிலையங்கள் அனைத்தும் காலை முதலே பெரும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். அப்படியிருக்கும்போது, கடந்த ஜூலை 24-ம் தேதி, கோடம்பாக்கம் அருகே உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து விழுந்ததால் அதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அதனால், சென்னை பீச்சில் இருந்து திருமால்பூர் வரை செல்லும் மின்சார புறநகர் விரைவு ரயில் தாமதமாக வந்துள்ளது. இதனால், நீண்ட நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பயணிகளின் கூட்டம் அதிகரித்திருந்தது. 

பிறகு வந்த  ரயிலில் நிற்கக்கூட இடமில்லாத அளவு பயணிகள் நிரம்பி வழிந்துள்ளனர். பரங்கிமலை ரயில் நிலையத்தில் எப்போதும் செல்லவேண்டிய தடத்தில் செல்லாமல்,  மாற்றி எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் இயக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக பல இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரும் கம்பிகளில் தொங்கியபடி பயணித்துள்ளனர். அவர்கள், சரியாக பரங்கிமலை ரயில் நிலையத்தைக் கடக்கும்போது, அங்கிருந்த தடுப்புச் சுவரின்மீது மோதிக் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக ரயில்வே பாதுகாப்புக் குழு விசாரணை நடத்திவருகிறது. 

இந்நிலையில், இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 8 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும் ரயில்வே தீர்ப்பாயம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களோ அல்லது அவர்களின் குடும்பத்தாரோ எந்த ஒரு முறையான விண்ணப்பமும் செய்யாமல் ரயில்வே தீர்ப்பாயம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதுவே முதல் முறை என தீர்ப்பாயத்தின் கூடுதல் பதிவாளர் அருந்ததி தெரிவித்துள்ளார்.  முதலில், அவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் இறந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும் , காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் ஒதுக்குமாறும், இறுதியில் வழங்கப்படும் தொகையுடன் இதை சரிசெய்துகொள்ளலாம் எனவும் தீர்ப்பாயத்தில் கூறப்பட்டுள்ளது.