வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (28/07/2018)

கடைசி தொடர்பு:16:10 (28/07/2018)

29 வயதில் 50 வழக்குகள்! - பெண் தோழியால் சிக்கிய தாம்பரம் ராம்கி

ரவுடி தாம்பரம் ராம்கி

சென்னையில், பெண் தோழியால் தாம்பரம் ராம்கி என்ற பிரபல ரவுடி போலீஸாரிடம் சிக்கியுள்ளார். 29 வயதாகும் அவர்மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 

சென்னை செம்பியம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான பெரம்பூர் மேம்பாலம் அருகில், உதவி கமிஷனர் அரிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ், போலீஸார் அண்ணாமலை, குப்புசாமி ஆகியோர் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக மின்னல் வேகத்தில் சிவப்பு நிற சொகுசு கார் ஒன்று சென்றது. அந்தக் காரை போலீஸார் மடக்கினர். ஆனால், கார் நிற்காமல் மேம்பாலத்தில் வேகமாகச் சென்றது. உடனடியாக போலீஸார், அந்த காரை விரட்டிச்சென்று பிடித்தனர். காரை சோதித்தபோது, 2 கத்திகள் இருந்தன. தொடர்ந்து விசாரித்தபோது, காருக்குள் இருந்தவர் ராமச்சந்திரன் என்ற தாம்பரம் ராம்கி என்ற பிரபல ரவுடி என்று தெரியவந்தது. அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``தாம்பரம் ராம்கிக்கு 29 வயதாகுகிறது. இவர்மீது 4 கொலை வழக்குகள், 5 கொலை முயற்சிகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 22 பிடிவாரண்ட்டுகள் உள்ளன. சென்னையில் உள்ள பெரும்பாலான காவல் நிலையங்களில், தாம்பரம் ராம்கி மீது வழக்குகள் உள்ளன. கூலிப்படைத் தலைவனாக இவர் செயல்பட்டுவந்துள்ளார். தமிழகத்தில் மட்டுமல்லாமல், ஆந்திராவிலும் இவருக்கு தொடர்பு உள்ளது. சிறுவயதிலேயே இவர், குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளார். 2009-ம் ஆண்டில்தான் முதல் கொலையைச் செய்திருக்கிறார். தாம்பரம் போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் சரித்திரப் பதிவேட்டில் இவரின் பெயர் உள்ளது.

ரவுடி ராம்கி

இரண்டு முறை குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட இவர், கடந்த மார்ச் மாதம்தான் சிறையிலிருந்து வெளியில் வந்துள்ளார். வந்தவுடன், சேலையூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம் பகுதியில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து, கார் மற்றும் லேப்டாப்பை திருடியுள்ளார். அந்த காரில்தான் சென்னை, ஆந்திரா எனப் பல இடங்களைச் சுற்றிவந்துள்ளார். கார் திருட்டு குறித்து சேலையூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  தாம்பரம் ராம்கிக்கு ஏராளமான பெண் தோழிகள் உள்ளனர். தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பெண் தோழி ஒருவர் வீட்டுக்கு அடிக்கடி அவர் வந்து செல்வார். அவர் மூலம்தான் தாம்பரம் ராம்கியைப் பிடிக்க எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தச் சமயத்தில்தான் வாகனச் சோதனையில் எங்களிடம் அவர் சிக்கிக்கொண்டார். தாம்பரம் ராம்கியிடமிருந்து 20 சவரன் நகைகள், ஆயுதங்கள், செல்போன், சொகுசு கார் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டுள்ளன" என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``தாம்பரம் ராம்கி, செம்பியம் காவல் நிலையத்திலும் செயின் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கும் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடியின் சகோதரி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த ரவுடி கொலைசெய்யப்பட்ட பிறகு, அவரின் சகோதரியின் வீட்டுக்கு அடிக்கடி செல்வார். சொகுசாகவும், ஆடம்பரமாகவும் வாழ்ந்துவந்த தாம்பரம் ராம்கியின் கூட்டாளிகள் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடிவருகிறோம்" என்றார். 

நெடுஞ்சாலைகளில் வழிப்பறிசெய்வதில் தாம்பரம் ராம்கி கில்லாடி என்கின்றனர் போலீஸார். ராம்கிக்கு வலதுகரமாக இருப்பவர், ஆந்திர மாநிலம் நகரியைச் சேர்ந்த சுரேஷ் என்று தெரியவந்துள்ளது. இவர்மீது, செம்மரக்கடத்தல் வழக்குகள் உள்ளன. தமிழகத்தில் குற்றச் செயல்களைச் செய்துவிட்டு, ஆந்திராவில் தலைமறைவாகிவிடுவார். காருடன் சிக்கிய ராம்கியிடம் போலீஸார் விசாரித்தபோது, சுரேஷ், பரிசாகக் கொடுத்ததாக முதலில் கூறியுள்ளார். தீவிர விசாரணைக்குப் பிறகுதான், அந்த கார் சேலையூரில் திருடப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது.