`கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராகிவிட்டது!’ - டி.கே.எஸ்.இளங்கோவன் தகவல் #Karunanidhi | Karunanidhi will be in hospital for two days, says Tks ilangovan

வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (28/07/2018)

கடைசி தொடர்பு:17:35 (28/07/2018)

`கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராகிவிட்டது!’ - டி.கே.எஸ்.இளங்கோவன் தகவல் #Karunanidhi

'தி.மு.க தலைவர் கருணாநிதி, இரண்டு நாள்கள் மருத்துவர்களின் மேற்பார்வையில் இருப்பார்' என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இளங்கோவன்


தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உடல்நலிவு ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, பல்வேறு கட்சியினர் தி.மு.க தலைவரின் உடல்நலம்குறித்து விசாரிக்க கோபாலபுரம் நோக்கி படையெடுத்தனர். இதையடுத்து, நேற்றிரவு கோபாலபுரத்தைச் சுற்றி அதிக அளவில் தொண்டர்கள் குவியத்தொடங்கினர். இதற்கிடையே, தனது வீட்டுக்கு புறப்பட்டுச்சென்ற தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், இரவு 12 மணி அளவில் கோபாலபுரத்துக்கு வந்தார். அவரைத் தொடர்ந்து துர்கா ஸ்டாலின், துரைமுருகன், அழகிரி, கனிமொழி, செல்வி உள்ளிட்ட பலர் அங்கு வந்தடைந்தனர். பின்னர், சிறிது நேரம் கழித்து காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார் கருணாநிதி.

கருணாநிதி

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டபின், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ரத்த அழுத்தம் சீராக உள்ளது எனக் கூறி அறிக்கை வெளியிடப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியின் உடல்நிலைகுறித்து அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலகினரும் விசாரிக்க நேரில் சென்றுவருகின்றனர். அதேபோல, அண்டை மாநில முதலமைச்சர்களும் நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க தலைவரின் உடல்நிலைகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், `சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க தலைவர் கருணாநிதி, இரண்டு நாள்களுக்கு மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார். ரத்த அழுத்தம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. உடல்நலம் தேறிவருகிறார்'  என்று அவர் தெரிவித்தார்.